மதுரை மாவட்டத்தில் முதன்முறையாக தென்னை மரங்களுக்கு இடையே ஊடு பயிராக குத்துச்செடி மிளகு சாகுபடி செய்யும் விழிப்புணர்வு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது
வாடிப்பட்டி மற்றும் போடிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ‘குமரன் ஃபார்ம்’ மற்றும் சோழவந்தான் பகுதிகளில், இந்த மிளகு செடி நடவுப் பணி நடைபெற்றது.

இதில் மதுரை அரசு வேளாண்மை கல்லூரி மாணவிகள் மற்றும் பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து நேரடி களப்பயிற்சியாக மிளகு செடிகளை நட்டனர்.
பொதுவாக மிளகு பயிர் மலைப்பிரதேசங்களில் பெரிய மரங்களில் கொடிகளாக மட்டுமே படர்ந்து வளரக்கூடியது. ஆனால், தற்போது வாடிப்பட்டி பகுதியில் முதன்முறையாகத் தென்னந்தோப்புகளில் ஊடு பயிராக குத்துச்செடி வடிவில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற உழவர் உற்பத்தியாளர் குழு செயலாளர் விவசாயி தலைவர் டாக்டர் அசோக் குமார், இயற்கை முறையில் உரங்களைப் பயன்படுத்தி மிளகு செடிகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு நேரடி ஆலோசனைகளை வழங்கினார்.

ஒரு ஏக்கருக்குச் சுமார் 150 முதல் 200 செடிகள் வரை நடவு செய்யலாம் என்றும், ஒரு செடியிலிருந்து 1 முதல் 1.5 கிலோ வரை மிளகு மகசூல் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோ மிளகு 800 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
மாணவ-மாணவிகள் நேரடியாக விவசாய நிலங்களுக்குச் சென்று பெற்ற இந்தப் பயிற்சி, அப்பகுதி விவசாயிகள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.