• Fri. Oct 30th, 2026

கள்ளழகர் கோயில் சாதுக்களுக்கு தீபாவளிக்கு புத்தாடை..,

ByKalamegam Viswanathan

Oct 30, 2026

தீபாவளி நெருங்கி வரும் சூழலில், ஆதரவற்றவரை தேடிச் சென்று அவர்களும் தீபாவளியை கொண்டாட புத்தாடைகள் வழங்கிய தன்னார்வலர் இளைஞர்களின் சேவை நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை கள்ளழகர் கோயில் பகுதியில் 50க்கும் மேற்பட்ட சாதுக்கள், முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

அழகர்கோயில், பழமுதிர்சோலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பிச்சை எடுத்து இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி, ‘மதுரை அன்பாலயம் நண்பர்கள்’ என்ற பெயரில் இணைந்துள்ள சில இளைஞர்கள், இவர்களுக்கு தீபாவளிக்காக புத்தாடைகள் வழங்கினர்.

அங்குள்ள 30க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சட்டை, வேட்டி, துண்டும், பெண்களுக்கு சேலை மற்றும் துண்டும் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்தனர்.

கொரோனா சமயத்தில் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வராததால், ஆதரவற்றிருந்த இவர்களுக்கு உணவு கொடுத்து இந்த சேவையைத் தொடங்கிய இளைஞர்கள், தற்போது 7வது ஆண்டாக உதவி செய்துள்ளனர்.

எந்தவித எதிர்பார்ப்பும் உதவியும் இல்லாமல் இந்த இளைஞர்கள் தன்னலம் இன்றி சேவை செய்துள்ளனர். சுயதொழில் செய்யும் இளைஞர்கள் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்வோர் என இந்த குழுவில் உள்ளோர் தங்களால் இயன்ற தொகையினை பங்களிப்பு செய்து இந்த உதவியினை செய்துள்ளனர்.