• Fri. Oct 30th, 2026

திருப்பரங்குன்றம் அருகே ஓடும் கார் தீப்பற்றி எரிந்து நாசம்..,

ByKalamegam Viswanathan

Oct 30, 2026

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் நான்கு வழிச்சாலையில் இன்று காலையில் ஓடிக்கொண்டிருந்த மாருதி ஆம்னி கார் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமானது. நல்வாய்ப்பாக காரில் இருந்த 4 பேரும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர்.
​

பாண்டி கோவில் பயணம்:
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் (37), பாரதி (38), பிரகாஷ் (38) மற்றும் கிருஷ்ணன் (35). நண்பர்களான இவர்கள் நான்கு பேரும் மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற பாண்டி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக உடுமலைப்பேட்டையில் இருந்து மாருதி ஆம்னி காரில் மதுரை நோக்கி வந்துகொண்டிருந்தனர். காரைக் கிருஷ்ணன் ஓட்டி வந்துள்ளார்.
​

கரும்புகை வெளியேறியது:
இவர்களது கார் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூர் நான்கு வழிச்சாலையில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. ஆரம்பத்தில் சாதாரண புகை என நினைத்தவர்கள், புகையின் தாக்கம் அதிகமாகவே உடனடியாக சுதாரித்துக் கொண்டனர். காரை ஓட்டி வந்த கிருஷ்ணன், தோப்பூர் கார் கம்பனி அருகே சாலையோரமாக வாகனத்தை உடனடியாக நிறுத்தியுள்ளார்.
​

இதையடுத்து காரில் இருந்த 4 பேரும் அவசர அவசரமாக கீழே இறங்கினர். அவர்கள் இறங்கிய அடுத்த சில நொடிகளில், கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
​

எலும்புக்கூடான கார்:
தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது. மேலும் காரில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின. இச்சம்பவம் அப்பகுதியில் சென்ற சக வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
​

தீயணைப்பு மீட்புப் பணி:
இதுகுறித்து தகவலறிந்த திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்தின் நிலையாளர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும் அதற்குள் கார் முழுமையாகச் சேதமடைந்திருந்தது.
​

சமயோசிதமாகச் செயல்பட்டு காரில் இருந்து உடனடியாக வெளியேறியதால், 4 பேரும் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
​

போலீசார் விசாரணை:
சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் காரில் ஏற்பட்ட மின் கசிவு (Short Circuit) அல்லது கேஸ் கசிவு (Gas Leakage) காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. நான்கு வழிச்சாலையில் கார் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டுப் போக்குவரத்தைச் சீர்செய்தனர்.