• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

அரசுப் பேருந்தின் ‘ஏர் சஸ்பென்ஷன்’ பலூன் திடீரென வெடித்து பழுது..,

ByKalamegam Viswanathan

Oct 29, 2026

மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் பகுதி அருகே, நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்தின் ‘ஏர் சஸ்பென்ஷன்’ (Air Suspension) பலூன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்தது என்ன?
அழகர்கோவிலில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி அரசு நகரப் பேருந்து (TN 01 AN 0937) சென்று கொண்டிருந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். பேருந்து தல்லாகுளம் அவுட்போஸ்ட் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கிவிட்டு, புறப்பட்ட சில வினாடிகளிலேயே பேருந்தின் அடியில் அமைந்துள்ள ‘ஏர் சஸ்பென்ஷன்’ (Air Suspension) எனப்படும் காற்றழுத்தத்தில் இயங்கும் பலூன் டைப் ஷாக் அப்சார்பர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

திடீரெனக் கேட்ட பயங்கர வெடி சத்தத்தால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் நிலைகுலைந்து பேரதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்ந்தனர். ஓட்டுநர் திறம்படச் செயல்பட்டுப் பேருந்தை உடனடியாக நிறுத்தியதால் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது.

பயணிகள் மாற்றுப் பேருந்தில் பயணம்:
சம்பவத்தைத் தொடர்ந்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இணைந்து அச்சத்தில் இருந்த பயணிகளை உடனடியாகக் கீழே இறக்கிவிட்டு, அவ்வழியாக வந்த மாற்றுப் பேருந்துகள் மூலம் அவர்களைத் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

சரிசெய்ய முயன்ற ஓட்டுநர்:
இதனைத் தொடர்ந்து, பேருந்தை இயக்க முடியுமா என ஓட்டுநர் ஆய்வு செய்தார். ஏர் சஸ்பென்ஷன் அமைப்பில் போதிய காற்றழுத்தம் (Air Pressure) இருந்தால் மட்டுமே வாகனத்தை நகர்த்த முடியும் என்பதால், ஓட்டுநரே பேருந்தின் அடியில் சென்று தற்காலிகமாகக் கட்டி சரிசெய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டார். எனினும், பழுது பெரிதாக இருந்ததால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து, உடனடியாகப் பேருந்து பணிமனைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, பழுதுநீக்கும் தொழில்நுட்பப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

சென்னையில் இயங்கிய பழைய பேருந்து மதுரையில் நகரப் பேருந்தாக இயக்கம்:
குறிப்பாக, இந்தப் பேருந்து முன்பு சென்னையில் ‘அரசு விரைவுப் பேருந்தாக’ (Express Bus) இயக்கப்பட்டு வந்த வாகனமாகும். நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்த அந்தப் பேருந்திற்கு மறுபராமரிப்பு (Refurbishment) செய்யப்பட்டு, தற்போது மதுரையில் நகரப் பேருந்தாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு இன்றி பழைய பேருந்துகளை நகர்ப்புற வழிகளில் இயக்குவதே இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகளுக்குக் காரணம் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த தல்லாகுளம் சாலையில் பேருந்தின் பாகம் வெடித்துச் சிதறிய சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.