கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்குச் சென்று கொண்டு இருந்த அரசு நகரப் பேருந்தில், பயணி ஒருவர் பேருந்தையே பாரு (Bar) போல நினைத்து ஓடும் பேருந்திலேயே மது அருந்திய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது.

கோவை – காந்திபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு நாள்தோறும் நூற்றுக் கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாகக் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் சென்று திரும்புவோர் என எப்போதும் கூட்ட நெரிசல் அதிகமாகவே காணப்படும்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 4 மணி அளவில், கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்ற TN 38 BN 3172 என்ற எண் கொண்ட அரசு நகரப் பேருந்தில் நபர் ஒருவர் பயணித்து உள்ளார்.
பேருந்து ஓடிக் கொண்டு இருந்த போதே, தனது பையில் மறைத்து வைத்து இருந்த மது பாட்டிலை வெளியே எடுத்து உள்ளார். யாருக்கும் சந்தேகமும் வராத வகையில், தண்ணீர் கூடக் கலக்காமல் ‘ராவாக’ அப்படியே குடித்துவிட்டு, சத்தமில்லாமல் மீண்டும் அந்த பாட்டிலைத் தனது பைக்குள்ளேயே மறைத்து வைத்து உள்ளார்.
அந்த நபருக்கு எதிரே அமர்ந்து இருந்த சக பயணி ஒருவர், மதுப்பிரியரின் இந்தச் செயலைத் தனது செல்போனில் ரகசியமாகக் படம்பிடித்து இணையத்தில் பதிவிட்டு உள்ளார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “அரசுப் பேருந்தையே பாராக மாற்றி விட்டாரே!” என்று கமெண்ட்களில் கிண்டலடித்து (Memes & Comments) வருகின்றனர்.
பல்வேறு தரப்புப் பொதுமக்களும் பெண்களும் நாள்தோறும் பயணிக்கும் அரசுப் பேருந்துகளில் இதுபோன்ற செயல்கள் நடப்பது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேநிலை தொடர்ந்தால், மற்ற நபர்களும் மாணவர்களும் இதுபோன்ற தவறான மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வழிவகுக்கும் என்பதால், பேருந்தில் மது அருந்திய அந்த நபர் மீதும், பேருந்துகளில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கவும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.




