லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற தனியார் ஷோரூம் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தனது தொகுதியான காமராஜர் நகர் பகுதியில் வெள்ள நீர் தேங்கும் பிரச்சினை குறித்துப் பேசிய அவர், இதனை Stone Hand முறையின் மூலம் சரிசெய்ய முடியும் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால் அனைத்துப் பணிகளையும் முடித்திருக்க முடியும் என்றும், ஆனால் நிதி திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஏற்கெனவே நீர்நிலைகள் இருந்த பகுதிகளில் முறையான திட்டமிடல் இல்லாமல் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதே இத்தகைய வெள்ளப் பாதிப்புகளுக்கு முக்கியக் காரணம் எனக் கூறினார். சென்னையில் முன்பு சுமார் 4,000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த நீர்நிலைகள் தற்போது 500 ஹெக்டேராகக் குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் லட்சிய ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதாகக் கூறினார். இளைஞர்கள் பலரும் அரசியலில் பங்கேற்கத் தயாராக இருப்பதாகவும், புதிய அரசியல் கட்சிகளை மக்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,உள்ளாட்சி தேர்தலில் தங்களது கட்சியின் பலத்தை அடிப்படையாகக் கொண்டே முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.மேலும், மின்சாரப் பிரச்சினைகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஜிஎஸ்டி வருவாய் உள்ளிட்ட விவகாரங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்த அவர், தற்போதைய அரசு புதிதாகப் பொறுப்பேற்றுள்ளதால் பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நான்கு மாத ஆட்சி குறித்துப் பேசிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தற்போதைய ஆட்சியாளர்களிடம் இருந்து மக்கள் எதிர்பார்த்த அளவிலான செயல்பாடுகள் இல்லை என விமர்சித்தார்.



