• Wed. Oct 21st, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வடவள்ளி மொபைல் கடையில் 4 புதிய செல்போன்கள் மற்றும் ரூ.15,000 ரொக்கம் திருட்டு..,

BySeenu

Oct 21, 2026

​கோவை, வடவள்ளி பகுதியில் உள்ள மொபைல் கடை ஒன்றில், வாடிக்கையாளர் போல நடித்துப் புதிய செல்போன்களையும், கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தையும் அள்ளிச் சென்ற மர்ம நபரின் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
​
வடவள்ளி பகுதியில் இயங்கி வரும் மொபைல் கடை ஒன்றிற்கு நேற்று வந்த நபர் ஒருவர், கடையில் இருந்த செல்போன்களின் விலையைக் கேட்டறிந்து உள்ளார். அப்போது சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பு உள்ள இரண்டு புதிய செல்போன்கள் தனக்கு உடனடியாக வேண்டும் என்றும், தவணை முறை (EMI) இல்லாமல் அதற்கான முழுப் பணத்தையும் ரொக்கமாக உடனே தருவதாகவும் நம்பிக்கையுடன் கூறி உள்ளார்.

​வாடிக்கையாளரின் பேச்சைக் நம்பிய கடைக்காரர், “இன்னிக்குக் கடையில ஸ்டாக் இல்லை, நாளைக்குக் காலை 10 மணிக்கு வாருங்கள்” என்று கூறி அனுப்பி வைத்து உள்ளார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு வர வேண்டிய அந்த நபர், காலையில் வராமல் மதியம் 3 மணி அளவில் கடைக்கு வந்து உள்ளார்.

கடைக்கு வந்த அந்த நபர், “இப்போ கையில் ரொக்கம் இல்லை, ஏ.டி.எம். (ATM) கார்டில் தான் பணம் உள்ளது, கார்டில் இருந்து பணம் எடுத்துத் தருகிறேன்” என்று கூறி உள்ளார். அதற்கு உதவ நினைத்த கடை ஊழியர், தனது இருசக்கர வாகனத்தைத் தருவதாகக் கூறி உள்ளார். ஆனால், அந்த நபரோ, “எனக்குக் கால் உடைந்து உள்ளது, என்னால் வாகனத்தை ஓட்ட முடியாது; நீங்களே என் கார்டை வைத்துப் போய் பணம் எடுத்து வாருங்கள்” என்று நாடகமாடி உள்ளார்.

​நம்பிக்கையின் பேரில் ஏ.டி.எம் கார்டை வாங்கிக் கொண்ட கடை ஊழியரும் பணம் எடுப்பதற்காக வெளியே சென்று உள்ளார்.

ஊழியர் ஏ.டி.எம் மையத்திற்குச் சென்ற அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர், கடையில் தனியாக இருந்த நேரத்தை உன்னிப்பாகக் கவனித்து உள்ளார். நொடியில் சுதாரித்துக் கொண்ட அவர், ஷோகேஸில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 4 புதிய விலைமதிப்பபான செல்போன்கள் மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த 15,000 ரூபாய் ரொக்கத்தை நைசாக அள்ளித் தனது பையில் திணித்துக் கொண்டு அங்கு இருந்து தப்பியோடி விட்டார்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த கடை ஊழியர், கடையில் இருந்த செல்போன்களும் பணமும் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை (CCTV) ஆய்வு செய்த போது, அந்த நபர் மிகத் துல்லியமாக நூதன முறையில் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

​தற்போது இந்தச் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், வடவள்ளி பகுதியில் உள்ள வியாபாரிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.