தேனி மாவட்டம், விஷ்வதாஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சுவேதா – கௌதம் தம்பதியினர். இவர்களுக்கும் அப்பகுதி நபர்களுக்கும் இடையே நகை அடகு வைத்தது தொடர்பாக கொடுக்கல்-வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், தாங்கள் வாங்கிய 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டியுடன் சேர்த்து முழுமையாகத் திருப்பிச் செலுத்திய பிறகும், பணத்தைத் தாமதமாகக் கொடுத்தாய் எனவும், அவசரத் தேவைக்காக வீட்டின் உரிமையாளரிடம் 31 கிராம் நகை வாங்கித் தரச் சொல்லிப் பெற்றுக் கொண்டதற்காகவும் கூடுதல் பணம் கேட்டு இந்தத் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மோகன் (என்ற அப்பு) மணிமாறன், பிரபு மற்றும் பிரபுவின் தம்பி பிரசாந்த் உள்ளிட்ட அடையாளம் தெரியாத 4 நபர்கள் உட்பட மொத்தம் 8 பேர் கொண்ட கும்பல், கஞ்சா மற்றும் மது போதையில் சுவேதாவின் வீட்டிற்குச் சென்று கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
போதையில் இருந்த அக்கும்பல், சுவேதாவின் கழுத்தில் அணிந்திருந்த நகையையும், தாலியையும் அறுத்துச் சென்று அத்துமீறியுள்ளது. மேலும், இதைக் தட்டிக்க கேட்க வந்த உறவினர்களான சுதா, கவிதா மற்றும் நந்தினி ஆகியோரின் சேலையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, வீட்டின் பின்புறம் இருந்த தகர செட்டின் மீது கற்களைத் தூக்கிப் போட்டுக் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கோரத் தாக்குதலில் படுகாயமடைந்த 5 நபர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கஞ்சா மற்றும் மதுப் போதையில் பொதுமக்களை அச்சுறுத்திப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் புகார் அளித்தும், கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் வெளியே வந்து மீண்டும் தொடர்ந்து தகராறு செய்து வருவதாகவும், தப்பியோடிய குற்றவாளிகள் மீதும், தொடர்ச்சியாக அச்சுறுத்தும் நபர்கள் மீதும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.



