• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கார் – இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி, இருவர் படுகாயம்!

ByKalamegam Viswanathan

Oct 18, 2026

மதுரை மாவட்டம், சோழவந்தான் சாலை மொட்டப்பாறை கரடிகள் அனுபவ பட்டி ஜங்ஷன் அருகில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதி நிகழ்ந்த கோர சாலை விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த விதம்:
மதுரை சிம்மக்கல், அபிமன்னன் சந்து பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (45). இவர் மோட்டை மலை பகுதியில் உள்ள உறவினர்களுக்கு விசேஷ பத்திரிகை வைத்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, சோழவந்தான் சாலை மொட்டப்பாறை கரடிகள் அனுபவ பட்டி ஜங்ஷன் மற்றும் திருமங்கலம் – செக்கானூரணி ரோடு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த காரும் இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்ததில் படுகாயமடைந்தனர். காரில் பயணம் செய்தவர்களுக்கு எந்தவிதமான காயமோ அல்லது சேதமோ ஏற்படவில்லை.

உயிரிழந்தவர் விவரம்:
இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த செல்வகுமார் (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்தவர்கள் விவரம்:
விபத்தில் படுகாயமடைந்த இருவர், 108 அவசர கால ஆம்புலன்ஸ் மூலமாக மீட்கப்பட்டு முதற்கட்டமாக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்:

  • முத்துகேஸ்வரி (வயது 35): இவருக்கு கை மற்றும் கால்களில் பலத்த அடிபட்டுள்ளது.
  • ஹரினி (வயது 11): இவர் முகத்திலும், கை மற்றும் கால்களிலும் கடுமையான காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.
    காவல்துறை விசாரணை:
    தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசேஷ பத்திரிகை கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்குத் திரும்பிய குடும்பத்தினர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.