சைபர் குற்றங்களிலிருந்து தப்பிப்பது எப்படி? டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் பணம் பறிக்கும் கும்பல்களிடம் எப்படி எச்சரிக்கையுடன் இருப்பது? உள்ளிட்ட விழிப்புணர்வு தகவல்களுடன் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி முனைவர் மணிவண்ணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி,
அண்மையில் மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், தனது பக்கத்தில் யாரோ ஒருவர் கேட்டார் என்பதற்காக தனது வீட்டு முகவரியை பகிர்ந்தார். இதனை அடுத்து அவரது இன்ஸ்டாகிராமைப் பின்பற்றும் சில விஷமிகள் அமேசான், flipkart உள்ளிட்ட பல்வேறு இணையதள வணிக நிறுவனங்களில், அக்குறிப்பிட்ட இன்ஸ்டா பிரபலத்தின் பெயரில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி என பல லட்சக்கணக்கான மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்களையும் கேஷ் ஆன் டெலிவரி மூலம் புக் செய்து விட்டனர். அவரது பெயரிலேயே ரூ.70 கோடிக்கு பீரங்கி ஒன்றும் ஆர்டர் செய்ததுதான் ஆகப் பெரிய வேடிக்கை. இந்நிலையில் நாள்தோறும் பல்வேறு நிறுவனங்களின் டெலிவரி நபர்கள் அவர் வீட்டின் கதவை தட்டி, அந்த குடும்பமே தொடர் துயரத்திற்கு ஆளானது. இந்நிலையில் அக்குறிப்பிட்ட இன்ஸ்டா பிரபலம் வீட்டை விட்டு வெளியேறி சென்று விட்டார் என்று கூறப்படுகிறது. அவரும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

இந்நிலையில் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி நடைபெறும் சைபர் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், காவல் துறை, நீதிமன்றம், வருமானவரித் துறை அதிகாரிகள் எனக் கூறி மிரட்டிப் பணம் பறிக்கும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் பொதுமக்கள் சிக்கக் கூடாது என்றும் விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவரும், சென்னை மாநகர காவல் துறை துணை ஆணையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான முனைவர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
அரசியல் டுடே செய்தி தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அனைவரும் இலக்காகும் சைபர் குற்றங்கள்!
கடந்த 40 ஆண்டுகளில் கணினி மற்றும் செல்பேசிகளின் பயன்பாடு அதிகரித்ததையடுத்து, குற்றங்களின் தன்மையும் மாறியுள்ளன. ‘By Computer, On Computer’ என்பதுதான் சைபர் குற்றங்களின் அடிப்படை. தொடக்கத்தில் இதுதொடர்பாக ஒன்றிரண்டு வழக்குகள் மட்டுமே பதிவான நிலையில், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப குற்றங்களும் அதிகரித்துள்ளன.
அரசின் நலத்திட்டங்களைப் பயன்படுத்தும் சாதாரண மக்கள்கூட இன்று ஆண்ட்ராய்டு செல்பேசிகளைப் பயன்படுத்துகின்றனர். பல்வேறு அரசு சேவைகளும் செல்பேசி வழியாகக் கிடைக்கின்றன. இதனால், செல்பேசி என்பது ஒவ்வொருவருக்கும் மூன்றாவது கைபோல இன்றியமையாததாகிவிட்டது.
தொழில்நுட்ப வசதிகள் அதிகரிக்கும் அதே வேளையில், அவற்றைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் குற்றவாளிகளும் அதிகரித்துள்ளனர். படிப்பறிவு இல்லாதவர்கள் மட்டுமே சைபர் குற்றங்களில் ஏமாறுகிறார்கள் என்ற நிலை மாறிவிட்டது. படித்தவர்கள், அறிஞர்கள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகின்றனர்.
சைபர் குற்றங்களால் பணத்தை இழப்பதுடன், பாதிக்கப்பட்டவர்கள் மனநிம்மதியையும் குடும்ப அமைதியையும் இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குக்கூட தள்ளப்படுகின்றனர். எனவே, சைபர் குற்றங்களைத் தடுப்பதில் விழிப்புணர்வு மிகவும் அவசியம்.
போலி இணையதளங்கள்; புதிய மோசடி உத்திகள்!
பொதுமக்களின் தேவைகள் மற்றும் தேடல்களை அடிப்படையாகக் கொண்டு மோசடிகள் நடைபெறுகின்றன. எந்தவொரு விளம்பரத்தையும் நம்புவதற்கு முன்பு அதன் உண்மைத்தன்மையையும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அரசு அங்கீகாரத்தையும் சரிபார்க்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் போன்றே வடிவமைக்கப்படும் போலி இணையதளங்கள் மூலமாகவும் மோசடிகள் நடைபெறுகின்றன. திருமணத் தகவல் இணையதளங்களிலும் பலர் ஏமாற்றப்படுகின்றனர். எனவே, இணையதளத்தின் முகவரி, நிறுவனத்தின் நம்பகத்தன்மை ஆகியவற்றைச் சரிபார்க்காமல் தனிப்பட்ட விவரங்களையோ பணத்தையோ வழங்கக் கூடாது.
‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்பது கிடையாது!
தற்போது ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் புதிய வகையான மோசடி நடைபெறுகிறது. காவல் துறை, நீதிமன்றம் அல்லது வருமானவரித் துறையால் கண்காணிக்கப்படுவதாகக் கூறி, பொதுமக்களை அச்சுறுத்திப் பணம் பறிக்கின்றனர்.
காவல் துறையில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற நடைமுறை ஒருபோதும் கிடையாது. இதுபோன்று யாராவது தொடர்புகொண்டு மிரட்டினால், அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்காமல் அழைப்பைத் துண்டிக்க வேண்டும். பின்னர் காவல் துறையிடம் புகார் அளிக்க வேண்டும்.
இதுபோன்ற மோசடி அழைப்புகள் வந்தால், 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம். மோசடி அழைப்பு வந்த எண்ணைக் குறிப்பிட்டு, பண இழப்பு ஏற்படாவிட்டாலும் புகார் அளிப்பது அவசியம். ‘நமக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லையே’ என்று புகார் அளிக்காமல் இருந்துவிடக் கூடாது.
தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம்!
சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாதவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காகத் தொலைபேசி எண், வீட்டு முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைப் பகிரக் கூடாது. குடும்பப் பிரச்சினைகள், தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பற்றிய விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய நபர்களை நட்புப் பட்டியலில் இருந்து நீக்குவது நல்லது.
சமூக வலைதளங்களில் அதிகமான விருப்பக்குறிகள் (லைக்குகள்) பெற வேண்டும் என்ற ஆர்வத்தில் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதையோ, பாதுகாப்பற்ற செயல்களில் ஈடுபடுவதையோ தவிர்க்க வேண்டும். செல்பேசிகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் பிறருக்குச் செல்வதைக் கட்டுப்படுத்த முடியும்.
விழிப்புணர்வே முதன்மையான பாதுகாப்பு!
சைபர் குற்றங்களைத் தடுப்பதற்காக மாநில அளவில் கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையிலும், மாவட்ட அளவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும் சைபர் குற்றப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. காலத்துக்கு ஏற்ப இப்பிரிவுகளும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
எவ்வளவுதான் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், சைபர் குற்றங்களைத் தடுப்பதில் தனிநபர்களின் விழிப்புணர்வும் எச்சரிக்கையும் முக்கியமானவை.
எனவே, சமூக வலைதளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்; தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க வேண்டும்; சந்தேகத்திற்குரிய விளம்பரங்கள் மற்றும் அழைப்புகளை நம்பக் கூடாது. சைபர் மோசடியில் சிக்கினால் தாமதிக்காமல் புகார் அளிக்க வேண்டும். இதன் மூலம் பண இழப்பைக் குறைப்பதுடன், குற்றவாளிகளைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளுக்கும் உதவ முடியும் என்றார்.
சைபர் குற்றங்களை அறிந்திருந்தால் மட்டும் போதாது

இந்தியாவில் சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 (Information Technology Act, 2000), பாரதிய நியாய சன்ஹிதா, 2023 (Bharatiya Nyaya Sanhita – BNS) உள்ளிட்ட சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இணையவழிப் பண மோசடி, போலி முதலீட்டுத் திட்டங்கள், சமூக வலைதளங்களில் மிரட்டல், அடையாளத் திருட்டு, ஆபாசப் படங்களைப் பயன்படுத்தி மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராகப் பொதுமக்கள் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆனால், சட்டங்கள் இருப்பதை அறிந்திருப்பது மட்டும் போதாது. மோசடி நடந்த முதல் சில நிமிடங்களில் என்ன செய்ய வேண்டும், எந்த ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும், எங்கு புகார் அளிக்க வேண்டும் என்பதைத் தெரிந்திருப்பதே பண இழப்பைக் குறைக்கவும் குற்றவாளிகளைக் கண்டறியவும் உதவும் என்கின்றனர் காவல்துறையில் பல்வேறு பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள். இதனைப் பொதுமக்கள் பின்பற்றினாலே சைபர் குற்றங்களிலிருந்து தங்களை முழுவதுமாக காப்பாற்றிக் கொள்ள முடியும்.



