• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

உள்ளாட்சித் தேர்தலில் வீதி லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும்: தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை அறிவிப்பு!

BySeenu

Oct 15, 2026

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் வீதி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்றும், அடிமட்டத்தில் இருந்து தலைவர்களை உருவாக்குவதே அமைப்பின் நோக்கம் என்றும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோயம்புத்தூரில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் அமைக்கப்பட்டுள்ள ‘சென்டர் பார் எத்திக்ஸ் அண்ட் பாலிடிக்ஸ்’ அரசியல் பயிற்சி மையத்தைத் தொடங்கி வைத்த பின்னர், அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தயார்!

தமிழகத்தில் எப்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் வீதி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். ஜனநாயகத்தில் அடிப்படை மாற்றம் என்பது உள்ளாட்சியில் இருந்து தொடங்கி மேல்நிலை வரை செல்ல வேண்டும் என்று நம்புகிறோம். இதற்காகத் தேவையான தலைவர்களை உருவாக்கி வருகிறோம்.

தமிழகத்தில் மேயர் முதல் ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வரை ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. அனைத்து இடங்களிலும் தலைமைப் பண்பு கொண்டவர்களை உருவாக்குவதே எங்களுடைய நோக்கம். கூட்டணியை நாடுவதைவிட, அனைத்து இடங்களிலும் அடிமட்டத் தலைவர்கள் உருவாக வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம்.

100 பெண்களுடன் அரசியல் பயிற்சி மையம் தொடக்கம்!

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையத்தைத் தொடங்கியுள்ளோம். முதல் கட்டமாக 100 பெண்கள் பயிற்சியில் பங்கேற்கின்றனர். 18 வயது முதல் 70 வயது வரையிலான பெண்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். தொடர்ந்து இளைஞர்கள், ஏற்கெனவே அரசியலில் இருப்பவர்கள், புதிதாக அரசியலுக்கு வர விரும்புபவர்கள் எனப் பலருக்கும் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அரசியலுக்கு வருபவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம், ஊடகச் சுதந்திரம், மாநிலப் பட்டியல், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து முறையான அறிவு இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் திறம்படச் செயல்பட முடியும்.

1956-57 காலகட்டத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அரசியல் பயிற்சிப் பள்ளியை நடத்தியதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, அதுபோன்று முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே வீதி லீடர்ஸ் அமைப்பின் நோக்கம் என்றார்.

அடுத்த ஓராண்டுக்குள் ஒரு லட்சம் பேருக்குப் பயிற்சி அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளோம். பயிற்சி பெற்றவர்கள் மக்களுடன் இணைந்து பணியாற்றி, மக்கள் சேவகர்களாக உருவெடுப்பார்கள் என நம்புகிறோம்.

மின் கட்டணப் பிரச்சினைக்கு நீண்டகாலத் திட்டம் தேவை!

தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருந்தாலும், உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேமிப்பதற்கான பேட்டரி கட்டமைப்புகளில் போதிய முதலீடு செய்யப்படவில்லை.

இதனால் மின் தேவை அதிகரிக்கும் நேரங்களில் வெளிச்சந்தையில் யூனிட்டுக்கு ரூ.28, ரூ.30, ரூ.35 என அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் தாக்கம் மின்கட்டணத்திலும் தொழில் துறையிலும் எதிரொலிக்கிறது.

மின் உற்பத்தி மற்றும் சேமிப்புக்கான நீண்டகாலத் திட்டத்தை அரசு வெளியிட வேண்டும். அடுத்த ஆண்டில் எவ்வளவு முதலீடு செய்யப்படும், காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரத்தைச் சேமிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும், வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குவதைக் குறைக்க என்ன திட்டம் உள்ளது என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

கடந்த கால ஆட்சிகளின் நஷ்டக் கணக்குகளைத் தொடர்ந்து பேசுவதற்குப் பதிலாக, எதிர்காலத்துக்கான திட்டங்களை அரசு முன்வைக்க வேண்டும். மாற்றத்தை எதிர்பார்த்தே மக்கள் ஆட்சிக்கு வாய்ப்பளித்துள்ளனர் என்றார்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை ஓராண்டுக்குப் பிறகு மதிப்பிடுவோம்!

தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகள் குறித்து இப்போதே முழுமையான மதிப்பீட்டை முன்வைக்க விரும்பவில்லை. ஆட்சி தொடங்கி நான்கு மாதங்களே ஆகியுள்ள நிலையில், ஓராண்டு காலம் பொறுத்திருந்து அதன் நிறை, குறைகளை மக்களிடம் தெரிவிப்பேன்.

ஆனால், ஆரம்பத்திலேயே தமிழகத்தின் எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வை அறிக்கையை அரசு வெளியிட்டிருக்க வேண்டும். அடுத்த ஓராண்டு மற்றும் அதற்குப் பிந்தைய காலத்தில் மாநிலத்தை எந்தத் திசையில் கொண்டு செல்லப் போகிறது என்பதை அரசு விளக்க வேண்டும்.

அரசியல் தலைவர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களுடன் கலந்து பழக வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்காகக் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும். வீதி லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் குப்பைகளை அகற்றுவது, நீர்நிலைகளைச் சுத்தப்படுத்துவது, போதைப்பொருட்களுக்கு எதிராகச் செயல்படுவது, பெண்கள் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களின் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைச் சந்திப்பது அரசியல் அல்ல. ஆண்டு முழுவதும் மக்களுக்காகப் பணியாற்றும் தலைவர்களை உருவாக்குவதே எங்களுடைய நோக்கம் என்றார்.

முதலமைச்சரின் பயணங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது!

முதலமைச்சர் விஜய் கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, இருபுறங்களிலும் தடுப்புகள் அமைத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

விஜய் ஏற்கெனவே பிரபலமான நடிகராகவும் அரசியல் தலைவராகவும் உள்ளார். அவருடைய பிரபலத்தை நிரூபிக்கத் தேவையில்லை. முதலமைச்சருக்குத் தேவையான அடிப்படைப் பாதுகாப்பை வழங்கிவிட்டு, பொதுமக்கள் தங்களது அன்றாடப் பணிகளைத் தடையின்றித் தொடர வழிவகை செய்ய வேண்டும்.

முதலமைச்சரின் வருகையால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் அரசு கவனிக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக மாணவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினர் பாதிக்கப்படக் கூடாது. இதற்கு முதலமைச்சர் தனிப்பட்ட முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா இல்லாதது வரவேற்கத்தக்கது!

தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா இல்லாததை வரவேற்கிறேன். இதுபோன்ற மாற்றங்கள் ஜனநாயகத்துக்கு நல்லது. சட்டமன்றத்துக்குப் புதிய உறுப்பினர்கள் பலர் வந்திருப்பதும் வரவேற்கத்தக்கது. இதில் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் முக்கியப் பங்கு உள்ளது.

அதே நேரத்தில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடிக்கடி கட்சி மாறி மீண்டும் களமிறங்குவது மக்களிடையே ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைக் குறைக்கக்கூடும். பொதுத்தேர்தலில் அதிக அளவில் வாக்களிக்கும் மக்கள், இடைத்தேர்தலில் குறைவாக வாக்களிப்பதற்கான காரணங்களையும் அரசியல் கட்சிகள் ஆராய வேண்டும்.

கட்சிகள் தங்களது வேட்பாளர் தேர்வு மற்றும் அரசியல் அணுகுமுறைகள் குறித்து சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றார்.

பெண்கள் பாதுகாப்பில் அடிப்படை மாற்றம் அவசியம்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டு, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான அடிப்படை மாற்றங்கள் அவசியம்.

வீதி லீடர்ஸ் அமைப்பின் மூலம் பெண்களுக்குத் தன்னம்பிக்கை, உடல் வலிமை, தலைமைப் பண்பு ஆகியவற்றை வளர்க்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பெண்கள் தங்களது சொந்தக் காலில் நின்று தலைவர்களாக உருவாக வேண்டும். ஒரு குற்றவாளி மீது நடவடிக்கை எடுப்பதோடு நின்றுவிடாமல், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் சமூக மாற்றத்தையும் உருவாக்க வேண்டும் என்றார்.

அரசியலில் தனிநபர் வழிபாட்டு கலாசாரத்தை மாற்ற வேண்டும்!

அரசியலில் தலைவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்தும் கலாசாரம் மாற வேண்டும். ஒவ்வொருவரும் தலைவராக உருவாக வாய்ப்பளிக்க வேண்டும். இதற்காகவே வீதி லீடர்ஸ் அமைப்பின் நிகழ்ச்சிகளில் அடிமட்டத் தொண்டர்களுக்கும் மேடையில் இடமளிக்கப்படுகிறது.

பயிற்சி பெறுபவர்கள் எதிர்காலத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக்கொள்வார்கள். தலைமைப் பண்பு என்பது பயிற்சியின் மூலம் வளர்க்கப்பட வேண்டியது. அதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளோம் என்றார்.

மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு வாழ்த்து!

மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் அரசியல் எதிர்காலம் தொடர்பாகக் கட்சி எடுக்கும் முடிவுகளில் தனக்குத் தலையீடு இல்லை என்று தெரிவித்த அண்ணாமலை, முருகனிடம் தொலைபேசியில் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததாகக் கூறினார்.

எளிய குடும்பப் பின்னணியில் இருந்து அரசியலுக்கு வந்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அமைச்சராகப் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர் முருகன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலில் நிலவும் தனிநபர் மைய அணுகுமுறை மாறி, மக்கள் சேவைக்கும் அடிமட்டத் தலைமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் சூழல் உருவாக வேண்டும். அதற்கான முன்னுதாரணமாகத் திகழ முயற்சி செய்து வருகிறோம். இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. எங்களது செயல்பாடுகளை மக்கள் கவனித்து மதிப்பிட வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.