கோவை, மாநகரின் முக்கியப் பொழுதுபோக்கு மற்றும் நடைபயிற்சித் தலமான வாலாங்குளம் பகுதியில், ஆங்காங்கே பெண்கள் அணியும் உள்ளாடைகள் மற்றும் சேலைகள் சிதறிக் கிடக்கும் காட்சிகள் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், முகசுழிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவையின் அழகிய குளக்கரைகளில் ஒன்றாக மேம்படுத்தப்பட்டு உள்ள வாலாங்குளத்திற்குத் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குடும்பத்தினர்கள் நடைபயிற்சிக்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் வாலாங்குளப் பகுதியில் நடைபயிற்சிக்குச் சென்ற நபர் ஒருவர், அங்கு உள்ள நடைபாதைகள் மற்றும் புதர்பகுதிகளில் பெண்களின் சேலைகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அணியும் மேல் உள்ளாடைகள் (Undergarments) ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இதனைப் புகைப்படம் மற்றும் வீடியோவாகப் பதிவு செய்த அவர், சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்.
ஒரே இடத்தில் இவ்வளவு அதிகமான பெண்கள் உடைகள் மற்றும் உள்ளாடைகள் கிடப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள்,
”இங்கு என்ன நடக்கிறது ?”
”காதலர்கள் எல்லை மீறுகின்றனரா ? அல்லது ஏதேனும் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றனவா ?” எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், குடும்பத்தினருடன் வரும் பொதுமக்கள் இது போன்ற காட்சிகளைக் கண்டு கடும் முகசுழிப்பும் அச்சமும் அடைந்து வருகின்றனர்.
மாநகரப் முக்கியப் பகுதியாக விளங்கும் வாலாங்குளத்தில் இது போன்ற சட்டவிரோதச் செயல்களோ ? அல்லது ஒழுங்கீனமான நிகழ்வுகளோ ? நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளக்கரையை ஒட்டி உள்ள பகுதிகளில் காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி 2ள்ளனர்.



