• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகனங்களில் இருந்து ஹெல்மெட்களைத் திருடிச் செல்லும் சம்பவங்கள்..,

BySeenu

Oct 4, 2026

கோவை மாநகரப் பகுதிகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் இருந்து ஹெல்மெட்களைத் திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரு வேறு இடங்களில் ஹெல்மெட் திருடப்படும் அதிர்ச்சி சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் வெளியாகி வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பின்புறம் உள்ள மைல்கள் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த ஹெல்மெட்டை, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்கள் நைஸாகத் தூக்கிச் செல்லும் காட்சிகள் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

​சிறுவயதிலேயே இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது அப்பகுதி மக்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோன்று, கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தைச் சுற்றிப் ஏராளமான வணிக வளாகங்கள், செல்போன் உதிரிபாகக் கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

​அங்கு உள்ள ஒரு கடைக்கு முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தில் தொங்கவிடப்பட்டு இருந்த ஹெல்மெட்டை, அங்கு வந்த மர்ம நபர் ஒருவன் லாவகமாக எடுத்துத் தான் கட்டி இருந்த லுங்கிக்குள் மறைத்து வைத்துக் கொண்டு சாதாரணமாக நடந்து செல்லும் அதிர்ச்சி காட்சி அங்கு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது.

கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சமீபகாலமாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் இருந்து ஹெல்மெட்கள் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

​ஒருபுறம் ஹெல்மெட் அணியாவிட்டால் போலீஸாரின் அபராதம், மறுபுறம் வாகனங்களை நிறுத்தி விட்டுச் சென்றால் ஹெல்மெட் திருட்டு என வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இச்சம்பவங்கள் குறித்துப் போலீஸார் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, ஹெல்மெட் திருட்டில் ஈடுபடும் நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.