வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக உழவு பணியை ஏற்கனவே முடித்த நிலையில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் பணியை விவசாயிகள் தீவிரப் படுத்தி உள்ளனர்.

கிணறுகள் ,கண்மாய்களிலும் போதிய தண்ணீர் இல்லாததால் மக்காச்சோளம், பருத்தி, சூரியகாந்தி, உள்ளிட்ட மானாவாரி பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து விதைக்கும் பணியில் எலுமிச்சங்காய் பட்டி, கிருஷ்ணாபுரம், தூங்கா ரெட்டிபட்டி, செல்லையாபுரம், மேட்டூர், வெள்ளையாபுரம், சத்திரம், எட்டக்காப்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து எலுமிச்சங்காய் பட்டி விவசாயி தங்கவேலு கூறியது
கிணறுகள், கண்மாய்கள், அதிக அளவு இல்லாததால் இப்பகுதியில் தொடர்ந்து மானாவாரி பயிரான மக்காச்சோளம் பயிரிட்டு வருகிறோம். பருவமழை தாமதமாக தொடங்குவதால் விதைக்கும் பணியும் தாமதமாக நடைபெற்று வருகிறது. விவசாய பணிக்கு போதிய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

மக்காச்சோளம் சாகுபடி செய்த மறுநாளே காட்டு விலங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளது சென்ற ஆண்டு காட்டு விலங்குகளால் பயிர்கள் அதிகம் சேதம் அடைந்தது இதனால் மிகவும் நஷ்டம் அடைந்தோம் .இந்த ஆண்டு ஆரம்ப கட்டத்திலேயே வன விலங்குகளை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும். மானிய விலையில் உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.




