தமிழ்நாட்டின் அரசியல் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில் முத்தரையர் இன மக்களுக்கு நிறையப் பங்கு உண்டு. குறிப்பாக டெல்டா மாவட்டப் பகுதிகளில் அவர்களது கைகள் தான் ஓங்கி இருக்கின்றன. அவர்களது ஆதரவை பெறாத எந்த கட்சியும் வெற்றி பெறுவதில் சிக்கல்கள் நிறைய உள்ளன. ஆனால் முத்தரையர்கள் நிரம்பி வாழும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அவர்கள் இருக்கும் வீட்டுக்கோ குடியிருக்கும் நிலத்துக்கோ எந்த உரிமையும் இல்லாமல் வசித்து வருகிறார்கள் என்பதை இவர்கள் எந்த லோகத்தில் வசிக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள நெடுங்குடி என்ற கிராமத்தில் ராஜாவயல் என்ற கிராமத்தில்தான் இந்த நிலைமை இருக்கிறது.

இது குறித்து ராஜாவயல் கிராமத்தைச் சேர்ந்த முத்தையன் என்பவர் கூறுகையில் எங்களுக்குள் ஏற்கனவே கோவிலில் வைத்து எடுத்த முடிவின்படி எங்கள் ஊரில் தேர்தல் நடைபெறாது. மற்ற தேர்தல்கள் நடைபெறும் நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் மட்டும் நடைபெறாது. அதற்குப் பதிலாக ஊராட்சி மன்றத் தலைவரை நாங்களே தேர்ந்தெடுத்துக் கொடுத்து விடுவோம். அந்த வகையில் சுழற்சி முறையில் வரும் வகையில் நெடுங்குடி அம்பாள்புரம் கைலாசபுரம் ஆகிய மூன்று பகுதிகளில் இருந்து முத்தரையர் மற்றும் வல்லம்பர் இன மக்களிலிருந்து ஊராட்சி மன்றத் தலைவரையும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரையும் அன்ன போஸ்டாகத் தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தி இருக்கிறோம். இந்த நிலையில் 150 குடும்பத்திற்கு மேல் வசிக்கும் ராஜாவயல் கிராமத்திற்கு இதுவரை அந்த பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. ஊராட்சி மன்ற உறுப்பினர் தொகுதி 6க்கான பிரதிநிதித்துவம் மட்டுமே எங்களுக்கு உண்டு. 100% முத்தரையர் இன மக்கள் வசிக்கும் எங்களுக்கு இதுவரை ஊராட்சி மன்ற உறுப்பினரைத் தாண்டி வேறு எந்த ஒரு பொறுப்புக்கும் வர முடியவில்லை.

அது ஒரு பிரச்சனை இல்லை என்றாலும் நாங்கள் வசிக்கும் ராஜாவாயல் பகுதிக்கு சாலை வசதியோ பேருந்து வசதியோ தெரு விளக்கு வசதிகளோ கிடையாது. குறிப்பாக நாங்கள் வசிக்கும் பகுதி காட்டுப் புறம்போக்குப் பகுதியாக இருக்கிறது. தவிர எங்களது வீடுகளுக்கு பட்டாவோ குடியிருக்கும் இல்லங்களுக்கு பட்டாவோ இதுவரை அரசாங்கம் வழங்கவில்லை. அது மட்டுமல்ல நெடுங்குடியில் இருந்து சிறிது தூரம் வரை பட்டா நிலங்கள் இருக்கின்றன. அதில் வல்லம்பர் இன மக்கள் மட்டும் வசிக்கிறார்கள். சாலையின் கீழ் புறம் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வழங்கப்பட்டிருக்கும் அதே நிலையில் மேற்குப் பகுதியில் இருக்கும் எங்கள் இன மக்களுக்கு அங்கும் நில உரிமைப் பட்டாவோ வீட்டு பட்டாவோ கிடையாது வெறுமனே குடியிருக்கிறார்கள் அவ்வளவுதான். அதே நிலை தான் ராஜா வயல் பகுதிக்கும் இருக்கிறது. எங்கள் பகுதிக்கு வந்த சாலை வசதியை அவர்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர எங்களுக்குக் கிடைக்கவில்லை.

எங்களுக்கு பட்டா வேண்டும் என்று வருவாய்த் துறை அதிகாரிகளிடம் நாங்கள் எப்போதெல்லாம் மனு கொடுக்கிறோமோ அப்போதெல்லாம் அவர்களுக்கு பட்டா கொடுக்கக் கூடாது என்று வல்லம்பர் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் எங்களுக்கு இதுவரை பட்டா இல்லாமல் இருக்கிறோம். அதனால் எங்களுக்கு எந்த ஒரு அரசுச் சலுகையோ வங்கிக் கடன் வசதியோ எதுவும் அரசாங்கம் ஏற்படுத்தித் தரவில்லை. இங்கு இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் முதல் வருவாய் ஆய்வாளர் வட்டாட்சியர் உள்ளிட்ட அனைவரும் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனுக் கொடுத்துப் பார்த்துவிட்டு இப்போது நாங்கள் சோர்ந்து போய் விட்டோம். எங்களுக்கு வழிகாட்டவும் ஆளில்லை. எங்களது வீடு இதுதான் என்று சொல்லிக்கொள்ள எங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அந்த வகையில் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்று மிகவும் வேதனையோடு தெரிவித்தார்.
இந்த பிரச்சினைகளை ஏற்கனவே தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் ஆலவயல் மாணிக்கம் அம்பலம் மற்றும் அவருடன் ராசு, வெள்ளைச்சாமி, செல்வராசு ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடமிருந்து பல்வேறு குறைகளையும் கேட்டு அறிந்து திருச்சி ஆர் வி.பரதனிடம் தெரிவித்திருக்கிறார்கள். அதிகாரிகள் மக்களுக்கு செய்யவில்லை என்றால் அந்த அதிகாரியிடம் அமைப்பாகச் சென்று கேட்போம் என்று அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து மாணிக்கம் அம்பலம் கூறியபோது வீட்டுக்கு பட்டா இல்லை என்கிற நிலையில் மின்னிணைப்பு கூட தற்காலிகமாகத்தான் பின்வாரியம் வழங்கி இருக்கிறது. இங்குள்ள மக்கள் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு சரியான சாலை வசதி கூட இல்லாமல் காட்டு வழியாக ஒத்தையடிப் பாதையில் ஏழெட்டு கிலோமீட்டர் சைக்கிளில் கடந்து சென்று பள்ளத்தூரில் படித்து வருகிறார்கள். படித்தும் பிரயோஜனம் கிடையாது. இந்த ஊருக்குள் ஒருவர் கூட அரசு ஊழியர் ஆக முடியவில்லை. செல்போன் வசதி எல்லாம் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வருகிறார்கள். இனியும் பொறுத்துப் பார்த்து பிரயோசனமில்லை என்கிற வகையில் தான் இப்போது அமைப்பாக மக்களைத் திரட்டி இருக்கிறோம். இனரீதியாக ஒடுக்கப்பட்டாலும் இனி மாற்று நடவடிக்கை எடுத்து இந்த மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய இருக்கிறோம் என்றார்.








