நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்த பொதுவுடமை கட்சிகள், கடந்த 120 நாட்களில் தவெக அரசின் பல்வேறு செயல்பாடுகளுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்துள்ளன. இதனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சிபிஐ அலுவலகத்தில் பாலன் இல்லத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்த இடம் அளித்தது உள்ளிட்ட விவகாரங்களிலும், இடதுசாரி இயக்கங்கள் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிரான தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கை, குஜிலியம்பாறையில் இடதுசாரி இயக்கத்தினரை கணக்கெடுக்க வட்டாட்சியர் பிறப்பித்த சுற்றறிக்கை, மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தவெக அரசுக்கு எதிராக இடதுசாரி இயக்கங்கள் குரல் கொடுத்ததாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 120 நாட்களில் தவெகவை விட்டு இடதுசாரி இயக்கங்கள் விலகி நின்றதை பார்க்க முடிகிறது என்றும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் உடல் மொழியையும் இடதுசாரி இயக்கங்கள் கடுமையாக எதிர்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஆட்சியின் ஆயுள் காலம் முழுவதும் ஆதரவாக இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் இயக்கங்களுடன் ஆலோசனை நடத்தாமல், “கஜானா காலியாக உள்ளது” என்ற நிலையிலும் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

தவெக அமைத்துள்ள மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் தாங்கள் இல்லை என இடதுசாரி கட்சிகள் தெரிவித்ததோடு, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து தவெகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாகவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு ஆதரவளிக்கும் என தவெக நம்பிக்கையுடன் பேசி வந்த நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது தவெக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆட்சிக்கு முன்பாக தவெக மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த தோழமைக் கட்சிகளும், தேர்தலின்போது தவெக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த பொதுமக்களும் தற்போது ஏமாற்றத்தை சந்தித்துள்ளதாக ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் தற்போதைய செயல்பாடுகள், முதலமைச்சர் விஜய் மீது அவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதையே காட்டுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பு ஏராளமான வாக்குறுதிகளை அளித்து, செயல்படுத்த முடியாத வாக்குறுதிகளையும் தாராளமாக வழங்கி தவெக ஆட்சிக்கு வந்ததாக குற்றம்சாட்டிய அவர், விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் பேருந்து கிடைக்காமல் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.
பேருந்து நிலையங்களில் குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் காத்திருந்து பேருந்துகளுக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அரசு குறைந்தபட்ச நடவடிக்கையைக்கூட எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் வெளிநாடு சென்றுள்ள நிலையில், அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொந்த பணிகளை கவனிக்கச் சென்றுவிட்டார்களா என்றும், 120 நாட்கள் உழைத்ததற்காக ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார்களா என்றும் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருபுறம் தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது; மறுபுறம் விழாக்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்த வேண்டும். தவெக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், இரண்டு தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். தவெகவுக்கு கடிவாளம் போட வேண்டும். இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.








