• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் காரின் மேற்கூறையில் இருந்து தவறி விழுந்த 50 பவுன் நகை மீட்பு..,

Byp Kumar

Sep 3, 2026

150 க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து, ஒரே நாளில் போலீசார் நகையை எடுத்த பால் வியாபாரியிடம் இருந்து நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள முருகபவுனம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார்.

இவர் தனது குடும்பத்துடன் கடந்த 30ஆம் தேதி உசிலம்பட்டியில் நடைபெற்ற தனது சகோதரி இல்ல திருமண நிகழ்ச்சிக்கு தனது காரில் சென்றார் .

மேலும் தனது மனைவியின் 50 பவுன் தங்க நகையை திருமண மண்டபத்தில் அணிந்து கொள்வதற்காக தனது காரில் கொண்டு செல்வதற்கு வீட்டில் இருந்து எடுத்த அருண்குமார் காரின் மேற் கூரையில் நகை பெட்டியை வைத்தது தெரியாமல் காரை கிளப்பி சென்று விட்டனர்.

இவர்கள் திண்டுக்கல் பழனி பைபாஸ் சாலையில் வத்தலகுண்டு இணைப்புச் சாலையில் சென்று கொண்டிருந்த போது காரின் மேலிருந்த சிவப்பு நிற நகைப்பெட்டி தவறி சாலையில் விழுந்தது.

இதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பார்த்து அந்த பெட்டியை எடுத்துச் சென்றுவிட்டார்.

அதன் பின்னர் உசிலம்பட்டி சென்று கொண்டிருந்த பொழுது காரில்
நகை பெட்டியை காணாத காரணத்தினால் மிகவும் பதட்டம் அடைந்தனர்.

தொடர்ந்து திண்டுக்கல் திரும்பிய அவர்கள் இதுகுறித்து திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மேற்கு காவல் நிலைய போலீசார் அவர்கள் பயணம் செய்த சாலையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது காரின் மேற்கூறையில் நகை பெட்டி கீழே விழுவதும், அந்த நகை பெட்டியை காவி வேட்டி அணிந்த நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து எடுத்துச் சென்றதும் பைபாஸ் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது.

தொடர்ந்து அந்த சாலையில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் நகை பெட்டியை எடுத்துச் சென்றது அதே பகுதியை சேர்ந்த பால் வியாபாரி குழந்தை ராஜ் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவரை மடக்கிப் பிடித்த போலீசார் தவறவிட்ட 50 பவுன் நகையில் 20 பவுனை வங்கி ஒன்றில் அடகு வைத்திருப்பதை கண்டறிந்தனர்.

இதை அடுத்து வங்கி மற்றும் அவர் வீட்டில் வைத்திருந்த 50 பவுன் நகையை மீட்டனர்.

மேலும் இந்த நகையை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பிறகு அங்கு சென்று நகையை தவறவிட்ட அருண்குமார் உரிய ஆவணங்களை காட்டி பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஒரே நாளில் துரிதமாக செயல்பட்டு பல்வேறு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இரண்டு ஆய்வாளர்கள், தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் என அனைவரும் துரிதமாக நகையை மீட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அருண்குமார் தெரிவித்தார்.