நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவு மற்றும் இயற்கை பேரிடரில் சிக்கி மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர் சரத்குமார் நேரில் வரவேற்று, அயலக தமிழர் நலத்துறை சார்பில் தேவையான உதவிகளை வழங்கினார்.

நேபாளத்தில் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த பலர் பேரிடரில் சிக்கிய நிலையில், அவர்களை மீட்க தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஏற்கனவே 21 பேர் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக சென்னையைச் சேர்ந்த 2 பேரும், மதுரையைச் சேர்ந்த 3 பேரும் இன்று சென்னை வந்தனர்.
மீட்கப்பட்டவர்களில் ஒருவரான சென்னை கந்தன்சாவடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கூறுகையில், விபத்து நடந்தபோது தாங்கள் கைலாய மலையில் இருந்ததாகவும், சீன எல்லைப் பகுதியில் இருந்ததால் பாதிப்பின் தீவிரம் ஆரம்பத்தில் தெரியவில்லை என்றும் தெரிவித்தார். பின்னர் நிலைமையின் மோசம் தெரியவந்ததாகவும், தமிழக அரசு தொடர்ந்து தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகே நம்பிக்கை ஏற்பட்டதாகவும் கூறினார்.

மேலும், உடல் மற்றும் மனரீதியாக கடுமையான பாதிப்புகளை சந்தித்ததாகவும், அங்கிருந்த சூழ்நிலையில் தமிழக அரசின் உதவியே தங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். பிற மாநிலங்களைச் சேர்ந்த யாத்திரிகர்களும் அங்கு இருந்த நிலையில், தமிழக அரசு மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகளை கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்ததாகவும் கூறினார்.
மதுரையைச் சேர்ந்த ராமசாமி, தங்களை பாதுகாப்பாக மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக நன்றி தெரிவித்தார். திரும்பி வரும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.
அதேபோல் சென்னை கந்தன்சாவடியைச் சேர்ந்த சாய் கீதா, அச்சத்தின் உச்சத்தில் இருந்த நேரத்தில் தமிழக அரசு தரப்பிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு தங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் மன ஆறுதலையும் அளித்ததாக தெரிவித்தார். தெய்வ அருளாலும், அரசின் உடனடி நடவடிக்கையாலும் உயிர் பிழைத்ததாக கூறிய அவர், மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகம் திரும்பச் செய்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு மீட்கப்பட்டவர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.




