மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏலவார்குழலி அம்மன் சமேத
ஏடகநாதர் சுவாமி திருக்கோவிலில், ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏடு எதிரேறிய விழா நடைபெறும் அதேபோல் இந்த ஆண்டும் பாரம்பரிய சிறப்புமிக்க திருப்பாசுர ஏடு எதிரேறிய திருவிழா பக்தி பரவசத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, திருக்கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் விநாயகர் பெருமான் மற்றும் திருஞானசம்பந்தர் எழுந்தருளினர்.
தொடர்ந்து, குதிரை வாகனத்தில் குலச்சிறை நாயனார் சுவாமிகள் வீதியுலா வந்தனர். சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, திருவேடகத்தின் முக்கிய ரத வீதிகள் வழியாக பவனி வந்து வைகை ஆற்றங்கரை மண்டபத்தை அடைந்தனர்.
வைகை ஆற்றங்கரையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான “திருப்பாசுர ஏடு எதிரேறிய” வரலாற்று நிகழ்வு தத்ரூபமாக நடத்தப்பட்டது.

கரைபுரண்டு ஓடிய காலத்திலும், தமிழின் பெருமையையும் சைவ சமயத்தின் சிறப்பையும் பறைசாற்றும் வகையில் திருஞானசம்பந்தர் எழுதிய ஏடு ஆற்று நீரை எதிர்த்து மிதந்து சென்று கரைசேர்ந்த அற்புதத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது. திருவேடகம் எனும் ஊரின் வரலாற்றுச் சிறப்புக்கும் பெயர்க்காரணத்திற்கும் சான்றாக விளங்கும் இந்நிகழ்வு பக்தர்களை பரவசமடைய வைத்தது.விழாவில் மதுரை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சிவபக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
ஆற்றங்கரையில் கூடியிருந்த பக்தர்கள் “ஓம் நமச்சிவாய”, “அரஹரா அரஹரா” என பக்தி கோஷங்களை எழுப்பி, திருஞானசம்பந்தரையும் ஏடகநாதர் சுவாமியையும் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். அர்ச்சகர் பரசுராம் பட்டர் பூஜைகள் நடத்தி பிரசாதம் வழங்கினார். கோவில் பரம்பரை அறங்காவலர் சேவகன் செட்டியார் கோவில் செயல் அலுவலர் இளமதி பணியாளர்கள் பிரதோஷ கமிட்டியினர் பக்தர்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




