• Tue. Aug 18th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

TNPL உள்ளிட்ட லீக் போட்டிகளில் சூதாட்ட முறைகேடு புகார்..,

ByKalamegam Viswanathan

Aug 18, 2026

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.), டெல்லி பிரீமியர் லீக் (டி.பி.எல்.) உட்பட பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்கள் நடத்தும் அனைத்து டி20 தொடர்களும் பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் சூதாட்டத் தரகர்களின் தொடர்பு, சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளை மட்டுமே தீவிரமாக கண்காணிக்கும் ஊழல் தடுப்பு பிரிவு, தற்போது முதல்முறையாக மாநில அளவிலான டி20 லீக் போட்டிகளையும் முழுமையாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. வீரர்கள், அணி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களை சூதாட்டத் தரகர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வீரர்கள் தங்கும் ஹோட்டல்களில் அவர்கள் யாரைச் சந்திக்கிறார்கள் என்பது வரை அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறுவோர் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டி.என்.பி.எல். தொடரின் 10-வது சீசன் திண்டுக்கல் மற்றும் சென்னையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஒருவர், வீரர்களுக்கான பகுதியில் மொபைல் போன் பயன்படுத்தியதற்காக 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு நடப்பு தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, “விளையாட்டின் நேர்மையைக் காக்க சிறிய விதிமீறல்களையும் பிசிசிஐ அனுமதிக்காது. தவறு செய்த வீரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் டி.ஜே. சீனிவாசராஜும் ஊழல் தடுப்பு பிரிவுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு, டெல்லி, மும்பை, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநில சங்கங்கள் தங்களின் சொந்த டி20 தொடர்களை நடத்துகின்றன. கடந்த 2018-ல் மாநில லீக் போட்டிகளுக்கான கடுமையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. முன்னதாக 2019-லும் டி.என்.பி.எல். தொடரில் சூதாட்டப் புகார்கள் எழுந்து விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.