கோவை அருகே மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த அண்ணனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து, சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று பாழடைந்த கிணற்றில் வீசிய தம்பி மற்றும் அவரது நண்பரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வெள்ளமடை, சமநாயக்கன்பாளையம் ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48). இவரது தாய் சரஸ்வதி. செந்தில்குமார் அடிக்கடி மது அருந்தி விட்டு குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு சுமார் 10.00 மணி அளவில் சரஸ்வதியின் வீட்டில் வைத்துச் செந்தில்குமாருக்கும், அவரது இளைய தம்பியான சம்பத்குமாருக்கும் (42) இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த தம்பி சம்பத்குமார் மற்றும் அவரது நண்பரான வெள்ளமடை விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (24) ஆகிய இருவரும் சேர்ந்து, செந்தில்குமாரைக் கையால் தாக்கியும், கத்தியால் மாறி, மாறிச் சரமாரியாகக் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்தனர்.
கொலை செய்த பின்னர், செந்தில்குமாரின் உடலை இருசக்கர வாகனத்தில் நடுவே வைத்துச் சுமந்து சென்ற இருவரும், வெள்ளமடை பகுதியில் உள்ள நட்ராஜ் என்பவரது தரிசு நிலத்தில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீசி விட்டுத் தப்பியோடினர்.
இச்சம்பவத்தைக் கண்டு அலறித் துடித்த தாய் சரஸ்வதி, பயத்தில் தனது மருமகள் மற்றும் பேரனுடன் கீரணத்தத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்று தஞ்சம் புகுந்தார்.

இந்நிலையில், கடந்த 6-ஆம் தேதி ஆண்டாள் நகர் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தைக் கைப்பற்றினர். தகவல் அறிந்து வந்த தாய் சரஸ்வதி, இறந்து கிடந்தது தனது மூத்த மகன் செந்தில்குமார் தான் என்பதை அவரது உடைகள் மூலம் உறுதி செய்தார்.

வெள்ளமடை கிராம நிர்வாக அலுவலர் (VAO) கார்த்திகா (49) அளித்த புகாரின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் முதற்கட்டமாக சந்தேக மரணம் (Sec 194 BNSS) எனப் பதிவு செய்யப்பட்டு இருந்த வழக்கு, தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், அண்ணனைக் கொன்ற தம்பி சம்பத்குமார் (A1) மற்றும் அவரது நண்பர் ஆனந்தகுமார் (A2) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.





