சாலையோர வியாபாரம் செய்து வரும் எனக்கு பிரதமர் திட்டத்தின் கீழ் வழங்கிய கடனுதவி பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. இதனையடுத்து நான் எழுதிய கடிதத்திற்கு, பிரதமர் மோடி பதில் அளித்து என்னை பாராட்டியுள்ளது பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என மதுரையைச் சேர்ந்த வியாபாரி தேசியமணி பேட்டி.

பிரதமரின் ஸ்வநிதி’ (PM SVANidhi) திட்டத்தின் பயனாளியான சாலையோர வியாபாரி தேசிய மணி, பிரதமர் அலுவலக முகவரிக்கு கடந்த ஜூலை 21, 2026 தேதியிட்டு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தின் கடினமான சூழலில், ‘பிரதமரின் ஸ்வநிதி’ திட்டத்தின் கீழ் வங்கி வழியாக மூன்று முறை கடன் உதவி பெற்று, அதனை முழுமையாகவும் உரிய நேரத்திலும் திருப்பிச் செலுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த அனுபவத்தால் உந்தப்பட்டு, தனது தொழிலை மேலும் வலுப்படுத்த தற்போது நான்காவது தவணைக் கடனைப் பெறவுள்ளதாகவும் அவர் எழுதியிருந்தார்.
அக்கடிதத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் பின்வருமாறு பதிலளித்திருந்தார். அந்த வியாபாரியின் கடிதத்தால் நெகிழ்ந்த பிரதமர் மோடி, அவரது வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், குடிமக்களின் இத்தகைய மனமார்ந்த கடிதங்கள், ஒவ்வொரு இந்தியரின் நலனுக்காகவும் மேலும் அதிக அர்ப்பணிப்புடன் உழைக்க ஊக்கமளிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மேல சித்திரை வீதியில் கடை நடத்தி வரும் தேசிய மணி ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ‘கடந்த 1962இல் எனது தந்தையார் இந்த இடத்தில் சின்ன பெட்டிக் கடையாக வைத்து நடத்தத் தொடங்கினார். அவருக்குப் பிறகு நாங்கள் அதனைச் செய்து வருகிறோம். தெரிந்த நபர்களிடம் கடன் பெற்று ஓரளவுக்கு தொழில் நடத்தி வந்தேன். ஜீரோ பாய்ண்ட் அக்கவுண்ட் என பிரதமர் மோடி அறிவித்ததன் அடிப்படையில் கனரா வங்கியில் எனது சேமிப்பைச் செய்து வந்தேன்.

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் முதலில் ரூ.10 ஆயிரம் கடன் பெற்றேன். அதனைக் கட்டி முடித்தவுடன் ஒரு மாதம் கழித்து ரூ.20 ஆயிரமும், அதற்குப் பிறகு ரூ.50 ஆயிரமும் கடன் பெற்றேன். இவை அனைத்தையும் கட்டி முடித்த பிறகு மீண்டும் கடன் கேட்டிருந்தேன். வங்கியில் காத்திருக்கச் சொன்னார்கள். பிறகு வங்கியிலிருந்தே ஒன்ற¬ரை மாதம் கழித்து மேலும் ரூ.50 ஆயிரம் கடனுதவி வழங்கினார்கள்.
ஜீரோ பாய்ண்ட் அக்கவுண்ட் மூலமாக யாருடைய பரிந்துரையும் இன்றி வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ளலாம் என்பது என்னைப் போன்ற சாலையோர வியாபாரிகளுக்கு வரப்பிரசாதம்தான். பிரதமரின் இந்தக் கடன் வசதியால் நான் பெற்ற பயனை அவருக்குத் தெரியப்படுத்தும் முயற்சியாக, பிரதமரின் தனிப்பிரிவுக்குக் கடிதம் எழுதினேன்.
அந்தக் கடிதம் சென்று சேர்ந்த 15 நாட்களுக்குப் பிறகு, பிரதமரின் அலுவலகத்திலிருந்தே என்னைத் தொடர்பு கொண்டார்கள். என்னிடம் விளக்கம் கேட்டனர். அதற்குப் பிறகு 6 நாட்கள் கழித்து பிரதமரிடமிருந்து என்னைப் பாராட்டி கடிதம் வந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கடன் குறித்து இப்பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் தெரிவித்து வருகிறேன். கடனைப் பெற்று முறையாகக் கட்டுங்கள். உங்களுக்குத் தேவையான கடனை மீண்டும் மீண்டும் வழங்கி உதவுவார்கள் என்பதைத் தொடர்ந்து அவர்களுக்கும் சொல்லி வருகிறேன்.
எனக்குத் தேசியமணி என்று பெயர் சூட்டியவர் பெருந்தலைவர் காமராஜர். எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் நடத்தி வந்த உணவுக்கடையைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. ஆகையால் தற்போது இந்தப் பெட்டிக்கடையை நடத்தி வருகிறேன். விடுபட்டுப்போன வாடிக்கையாளர்களை மீண்டும் வரவழைக்கும் வரை இந்தப் பெட்டிக்கடையைத் தொடருவேன். இதற்கு பேருதவி புரிந்த வங்கி, அரசு அதிகாரிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.




