காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸின் 27-வது பேரவைக் கூட்டம் காரைக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதுச்சேரி அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.எச். நாஜிம், டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம், டாக்டர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், வணிகர்கள், தொழிலதிபர்கள், சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 2025–26 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கி பாராட்டினர்.
பின்னர் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில், 2026–ஆம் ஆண்டிற்கான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, காரைக்காலில் நீண்டகாலமாக நிலவி வரும் மின்சார விநியோகக் குறைபாடுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும், தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்த வேண்டும், மழைநீர் வடிகால் மற்றும் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன், காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று பாராட்டினார்.
மேலும், காரைக்கால் இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அனைவரின் பொறுப்பாகும் என்றும், ஒவ்வொரு வணிக நிறுவனமும் தங்களது ஊழியர்களுக்கு இஎஸ்ஐ (ESI), பிஎப் (PF) உள்ளிட்ட மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயன்களை வழங்கும் வகையில் பணியில் அமர்த்தினால், இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பணியாற்ற ஆர்வம் அதிகரிக்கும் என்றார்.
புதுச்சேரி அரசு மற்றும் முதலமைச்சர், மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், “நானும் காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸின் 20 ஆண்டுகால உறுப்பினர் என்பதில் பெருமை கொள்கிறேன்” என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், காரைக்கால் மாவட்டத்தின் வணிகம், தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்காக அரசு மற்றும் வணிக அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.




