காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வடமேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட படப்பையில் அமைந்துள்ள கண்ணப்பா திரையரங்கில், ‘ஜனநாயகம்’ திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில் உற்சாக கொண்டாட்டம் நடைபெற்றது.

திரையரங்க வளாகம் முழுவதும் பிரம்மாண்ட பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் அமைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. திரைப்படத்தை வரவேற்க ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு குன்றத்தூர் வடமேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் விஜயகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் சரண்யா சங்கர் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி படப்பை கே. டேவிட் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மேலும், அசோக் குமார், சதீஷ்குமார், வழக்கறிஞர் பிரகாஷ், மனோத்தா மனோகரன் உள்ளிட்ட வடமேற்கு ஒன்றிய மற்றும் சாலமங்கலம் பகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக, திரைப்படம் காண வந்த ரசிகர்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்தாக சிக்கன் பிரியாணி வழங்கி, திரைப்பட வெளியீட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
ரசிகர்களின் ஆரவாரமும், திரையரங்கில் நிலவிய கொண்டாட்ட சூழலும், ‘ஜனநாயகம்’ திரைப்படத்தின் வெளியீட்டை படப்பையில் விழாக்கோலமாக மாற்றியது.




