• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Jul 11, 2026

சோழவந்தான் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி பொதுமக்கள் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த பேருந்து நிலையம் ஆனது மதுரை திருமங்கலம் வாடிப்பட்டி உசிலம்பட்டி நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் நிறுத்துவதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு அப்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக திறக்கப்பட்டது. ஆனால் 60% பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வராத நிலையில் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் ஆகியோர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் வசதி இரண்டு வருடமாக செய்து தரவில்லை மேலும் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் அவர்கள் அமர்வதற்கு போதிய இருக்கைகள் எதுவும் இல்லை பேருந்து நிலையத்தில் எந்த பேருந்து எந்த நேரத்தில் வந்து செல்லும் என்ற அறிவிப்பு பலகை முறையாக இல்லை பயணிகளுக்கு சந்தேகங்களை விளக்குவதற்கு போக்குவரத்து பணியாளர்களோ நேர காப்பாளர்களோ இங்கு இல்லை அவர்களுக்கான அரை எப்போதும் பூட்டியே கிடக்கிறது.

மேலும் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி மற்றும்குடிநீர் குழாய் ஆகியவற்றில் குடிநீர் வருவதே இல்லை. இதுகுறித்து பயணிகள் தரப்பில் பல முறை புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் இரண்டு வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டிய பேருந்துகள் தென்கரை வைகை ஆற்று பாலம் வட்ட பிள்ளையார் கோவில் ஆகிய பகுதிகளில் நின்று சென்று விடுகிறது. பேருந்து நிலையத்திற்கு வர வேண்டிய வாடிப்பட்டி பேருந்துகள் அனைத்தும் தபால் அலுவலகம் அருகில் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் நின்று செல்கிறது.

இதன் காரணமாக பேருந்து நிலையத்திற்குள் பேரூராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ள வணிக நிறுவனங்கள் பல ஏலம் விட்டும் வணிகர்கள் வராத நிலையிலும் பல்வேறு கடைகள் ஏலம் விடப்படாத நிலையில் காத்தாடி கிடைக்கிறது. பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு சில கடைகளிலும் வியாபாரம் இல்லாத நிலையில் எப்போது மூடுவோம் என என்ற நிலையில் வியாபாரிகள் உள்ளனர். அருகிலேயே சோழவந்தான் ரயில் நிலையம் உள்ள நிலையில் சென்னை மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டத்திற்கும் சோழவந்தான் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் செல்ல வேண்டிய பயணிகள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய நிலையில் பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

உள்ளூர் பயணிகள் ஆட்டோ கார் என பிடித்து தங்கள் சொந்த ஊர்களுக்கு கூடுதல் பணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்கள் உள்ளதால் சோழவந்தான் பேருந்து நிலையத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். முக்கியமாக சோழவந்தான் வரக்கூடிய அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பேருந்து நிலையத்திற்குள் குடிநீர் தங்கும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக பயணிகளுக்கு செய்து தர வேண்டும். போக்குவரத்து பணியாளர்கள் பேருந்து நிலையத்தில் இருப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் புற காவல் நிலையம் அமைத்து காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்என்று பொதுமக்கள் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.