• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ரயில்வே பாலத்தடியில் பட்டப்பகலில் குடிமகன்கள் அராஜகம்..,

BySeenu

Jul 11, 2026


கோவை இருகூர் – போத்தனூர் சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில், பட்டப் பகலிலேயே கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்தும் நபர்களை, அந்த வழியாகத் தனது மனைவியுடன் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேருக்கு, நேராகத் தட்டிக்கேட்டு வெளுத்து வாங்கிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

​ஒண்டிப்புதூர் டாஸ்மாக் மூடல்… பாலம் அடியில் பார்களாக மாறிய அவலம்:

கோவை, ஒண்டிப்புதூர் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக்கடை ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் இருந்த மதுப்பிரியர்கள் பலரும் மாற்று இடங்களைத் தேடி அலையத் தொடங்கினர்.
​இதன் விளைவாக, இருகூரில் இருந்து போத்தனூர் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் உள்ள நிழலான பகுதியைத் தங்களது கூடாரமாக மாற்றி உள்ளனர்.

தினமும் பகல் நேரத்திலேயே இங்கு நூற்றுக் கணக்கான குடிமகன்கள் கூட்டம், கூட்டமாகவும், வரிசையாக அமர்ந்தும் எவ்வித பயமும் இன்றி பகிரங்கமாக மது அருந்தி வருகின்றனர்.

​“பட்டப்பகலில் இப்படி வந்து குடிக்கிறீங்க…”

​இந்த ரயில்வே பாலத்தின் வழியாகத் தான் பள்ளி, கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் எனத் தினந்தோறும் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர்.

குடிமகன்களின் இந்த அநாகரிகச் செயலால் பெண்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தோடும், அருவருப்போடும் இப்பகுதியைக் கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

​இந்நிலையில், இன்று அந்த வழியாகத் தனது மனைவியுடன் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், பாலத்தின் கீழ் வரிசையாக அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்த கும்பலைக் கண்டு கொதித்தெழுந்தார். உடனடியாகத் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தபடி அவர்களை நோக்கிச் சென்று கம்பீரமாகச் சத்தம் போட்டார்.

​“உங்க வயசுக்கு நாங்க அறிவுரை சொல்லக் கூடாது சார்… நீங்க தான் எங்களுக்கு அறிவுரை சொல்லணும்… என்று முதியவரை பார்த்து கூறியவர்,

இத்தனை லேடிஸ் இந்த வழியாத் தான் போறாங்க… உங்க வீட்டுப் பொம்பளைகளும் இந்த வழியாத் தான் போவாங்க… அப்ப அவங்களுக்கும் பயம் இருக்குமா ? இருக்காதா ? எத்தனை லேடிஸ் ரோட்ல நடக்குறாங்க… பட்டப்பகல்ல இப்படி வந்து குடிக்கிறீங்களே… கொஞ்சமாவது அறிவு இருக்கா ?” என்று நெத்தியடியாகக் கேள்விகளைக் கேட்டு அடுக்கடுக்காக வெளுத்து வாங்கினார்.

​ஒரு சாமானிய குடும்பஸ்தர், அதுவும் மனைவியுடன் வந்து தங்களை தைரியமாகத் தட்டிக் கேட்பதை எதிர்பார்க்காத அந்த மதுப்பிரியர்கள், வீடியோவில் தங்களது முகம் பதிவாகிவிடும் என்ற பயத்தில், கையில் இருந்த மது பாட்டில்களை மறைத்தபடி அங்கு இருந்து நாலாபுறமும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

​இந்த முழுச் சம்பவத்தையும் அவர் எடுத்த வீடியோ தற்பொழுது கோவை சமூக வலைதளப் பக்கங்களில் வேகத்தில் பரவி வைரலாகி வருகிறது.