மதுரை: பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தடுத்து, அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பேருந்துக்குள் ஏறிய பிறகே பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநரின் செயல் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அமூர் நோக்கி. TN58N3209 இயக்கப்படும் அரசு பேருந்து அவுட்போஸ்ட் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, சில பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்ய முயன்றனர். இதைக் கவனித்த ஓட்டுநர், மாணவர்களை சத்தமிட்டு எச்சரித்து, அனைவரும் பேருந்துக்குள் முழுமையாக ஏறியதை உறுதி செய்த பின்னரே பின்கதவை மூடி பேருந்தை இயக்கினார்.

மாணவர்களின் உயிர் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து பொறுப்புணர்வுடன் செயல்பட்ட ஓட்டுநரின் இந்த நடவடிக்கைக்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதுபோன்று ஒவ்வொரு அரசு பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாகக் கடைப்பிடித்தால், படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் பல உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.





