விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு பள்ளியில் ஆய்வு நடத்தியபோது மாணவிகளுக்கு பாடம் எடுத்த அமைச்சர் கீர்த்தனா…. மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டபோது பதில் சொல்ல திணறியதால் வகுப்பு ஆசிரியையிடம் கடிந்து கொண்டு ஆங்கிலத்தை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படிக்கும் வகையில் பாடம் எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

சிவகாசி அருகே திருத்தங்கலில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறை, வகுப்பறை கட்டிடம் சமையலறை ஆகியவற்றில் ஆய்வு நடத்தி வகுப்பறை கட்டிடங்களின் தரம் குறித்தும் சுகாதாரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு தலைமை ஆசிரியரிடம் பள்ளியின் சுகாதாரத்தை மேம்படுத்த அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து வகுப்பறையில் ஆய்வு நடத்திய அமைச்சர் கீர்த்தனா பள்ளியில் உள்ள குறைகளை தன்னிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு பாடம் எடுத்த அமைச்சர் கீர்த்தனா மாணவிகளுடன் ஆங்கிலத்தில் சில கேள்விகளை முன் வைத்தார். அமைச்சரின் கேள்விகளுக்கு மாணவிகள் பதிலளிக்க முடியாமல் திணறியதால் சம்பந்தப்பட்ட வகுப்புஆசிரியையிடம் கடிந்து கொண்ட அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தை மனப்பாடம் செய்யாமல் அவர்கள் புரிந்து படிக்கும் வகையில் பாடம் நடத்துமாறு அறிவுறுத்தினார். மேலும் மாணவிகளுக்கு “ஸ்போக்கன் இங்கிலீஷ்” கற்றுத் தர வேண்டும் எனவும் ஆங்கிலம் என்பது மாணவர்கள் வெளியே செல்லும் போது ஒரு நம்பிக்கையை கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து கணினி அறிவியல் ஆய்வகத்தை ஆய்வு செய்த அமைச்சர் அங்கு மூடி வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டர்களை கண்டு அதிர்ச்சி அடைந்தார், பின்னர் கம்ப்யூட்டர்கள் அனைத்தும் தூசி படிந்து இருந்தது குறித்து அமைச்சர் கீர்த்தனா கேட்டபோது கணினி அறிவியல் ஆய்வகத்திற்கு ஆசிரியரே இல்லை என்பதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து ஆய்வின்போது பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியர் இல்லாததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி பள்ளியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.





