• Fri. Jul 3rd, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

குட்டிகளுடன் படையெடுத்த ‘பாகுபலி’ குடும்பம்..!

BySeenu

Jul 3, 2026

கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரக் கிராமத்தில், நேற்று ஒற்றை யானை வந்து தண்ணீர் குடித்த நிலையில், இன்று அதே இடத்திற்கு மூன்று குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் கொண்ட பிரம்மாண்ட கூட்டம் உணவு மற்றும் தண்ணீர் தேடிப் படையெடுத்து உள்ள பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை, பெரியநாயக்கன்பாளையம், தடாகம் மற்றும் சின்னத்தடாகம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட 24 வீரபாண்டி ஊராட்சி, மூலக்காடு என்ற பழங்குடியின கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து உள்ளது. அடர்ந்த காப்புக் காடுகள் நிறைந்த இப்பகுதியில் இருந்து வறட்சி மற்றும் கொளுத்தும் கோடை காரணமாக, உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி விளைநிலங்கள் மற்றும் எல்லைக் கிராமங்களுக்குள் புகுவது தொடர்கதையாகி உள்ளது.

நேற்று தான் இந்த மூலக்காடு ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர் குடியிருப்பு அருகே அமைக்கப்பட்டு இருந்த பொதுத் தண்ணீர் தொட்டியில், ஒற்றைக் காட்டு யானை ஒன்று தாகம் தீரத் தண்ணீர் குடித்த நெகிழ்ச்சியான வீடியோ வெளியாகி வைரலானது. அதைத் தொடர்ந்து, இன்று அதே இடத்திற்குத் தனது குடும்பத்தாரோடு அந்த யானை 3 குட்டி யானைகள் உட்பட மொத்தம் 7 யானைகள் கொண்ட கூட்டம் ஒட்டுமொத்தமாகப் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்குள் புகுந்து உள்ளது.


​அங்கு இருந்த பொதுத் தண்ணீர் தொட்டி மற்றும் காடுகளின் எல்லையில் இந்த 7 யானைகளும் தங்களது குட்டிகளைப் பத்திரமாக நடுவில் நிறுத்திக் கொண்டு, உணவு மற்றும் தண்ணீருக்காக உலா வரும் காட்சிகளை அங்கு இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் தத்ரூபமாக வீடியோ எடுத்துப் பகிர்ந்து உள்ளார்.

பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், குட்டிகளுடன் இருக்கும் யானைகள் தங்களின் குட்டிகளுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால் சற்றே ஆக்ரோஷமாக மாறக்கூடும் என்பதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

​தற்போது இந்த யானைக் கூட்டம் மூலக்காடு கிராமத்தின் எல்லைப் பகுதியிலேயே முகாமிட்டு உள்ளதால், எப்போது என்ன நடக்குமோ ? என்ற பீதியில் ஆதிவாசி மக்கள் முடங்கி உள்ளனர். எனவே, வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இந்த 7 யானை கூட்டத்தையும் பத்திரமாக, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என்றும், தங்களின் உயிர் மற்றும் உடமைக்குப் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும் மூலக்காடு பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.