• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

உண்மையிலேயே பாதிக்கப் பட்டவர்களை மீட்டது நாங்கள்தான்..,

Byமுகமதி

Apr 20, 2026

குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் களத்தில் எனது உறவினர்களின் ஓட்டுகளை நான் வாங்கப் போகிறேன் என்று சொல்லி தேர்தலில் நிற்பதைப் பார்க்க இதற்கு முன் முடிந்திருக்கிறது. ஆனால் 256சாதிகளின் தலைவர்களையும் ஒன்றிணைத்து அமைப்பும் கட்சியும் தொடங்கி தேர்தலில் களம் காண முடிகிறது என்றால் அது இந்தத் தேர்தலில் முடிகிறது. அதுவும் ஓர் அரசுப் பணியில் இருந்தவர் என்றால் வியப்பாக இருக்கிறது.

தமிழக காவல்துறையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தமிழக அரசு தேர்வாணையக் குழு உறுப்பினராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற கோவையைச் சேர்ந்த ரத்னசபாபதி அவர்கள் ஓ.பி.சி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தனது சொந்த முயற்சியால் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளான கொங்கு வேளாளர், முக்குலத்தோர், முத்தரையர், யாதவர், வெள்ளாளர், உடையார், அனைத்து செட்டியார்கள், குலாலர், நாடார், விஸ்வகர்மா, அனைத்து நாயுடுகள் என தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட 256 சாதிகளின் தலைவர்களை ஒருங்கிணைத்து ஓபிசி ரைட்ஸ் என்ற அமைப்பை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாக துவக்கியிருக்கிறார்.

அமைப்பு துவங்கியது முதல் ஓபிசி மக்களுக்கான உரிமையை மீட்டெடுக்கும் முயற்சியில் பல்வேறு போராட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தியதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கு வெளியிலும் பாதிக்கப்படக்கூடிய ஓபிசி மக்களை சந்தித்து அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை எடுத்துக் கூறி அமைப்பை வலுப் படுத்தினார்.

இது குறித்து ஓபிசி மக்கள் உரிமைக்கான கட்சியின் மத்திய மண்டலச் செயலாளர் சரவணதேவா கூறுகையில் தமிழ்நாட்டில் வன்கொடுமைச் சட்டத்தால் பயன் பெறுபவர்கள் அதிகம். அதற்காகவே போலி வன்கொடுமை வழக்குகளை பதிவு செய்வதைப் பார்க்க முடிகிறது. அவ்வாறு போலியாகப் பாதிக்கப ;பட்டவர்கள் அவ்வளவு எளிதில் அதிலிருந்து மீண்டு வந்துவிட முடியாது. அதே நேரத்தில் அவர்களுக்கும் வன்மம் ஏற்படுவது இயற்கைதான்.

ஆனால் மேலும் மேலும் இந்த வன்மம் தொடரக் கூடாது என்பதற்காக போலி வன்கொடுமை வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகள் செய்து வழக்குகளை எதிர்கொள்ள வைத்தார். அவர் காவல் கண்காணிப்பாளராக இருந்ததால் அதன் கொடுமைகள் நன்கு தெரிந்து உதவிகளைச் செய்து பலரையும் மீட்டார்.
குறிப்பாக வடகாடு கிராமத்தில் இரு சாதிக்குள் பிரச்சினை வந்து விட்டது. சாதீய மோதலாக உருவெடுத்து தீ வைப்பு சம்பவம்வரை போய் விட்டது. அந்தப் பிரச்சினைக்குக் காரணமானவர்கள் பல பொய்களைச் சொல்லியும் பல தவறுகளைச் செய்தும் பொதுவெளியில் அனுதாபம் தேடிக் கொண்டார்கள்.

தவறு செய்யாத தரப்பில் இருந்து 23பேர் சிறைக் கொடுமையை அனுபவித்து வந்தார்கள். அவர்களுக்காக எந்தவொரு அரசியல்வாதியும் களம் இறங்கவில்லை. அவர்களுக்கு நடந்த சம்பவம் என்னவென்றே உண்மையை அறியாமல் விட்டு விட்டார்கள். அந்த இளைஞர்களை வெளியில் கொண்டு வந்தது எங்கள் அமைப்புதான்.
அதனை அடுத்து கூட்டமைப்பாக இருந்த அமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது அமைப்பைச் சார்ந்த வேட்பாளர்களை முடுக்கி விட்டு தற்போது தமிழ்நாடு முழுவதும் பல தொகுதிகளில் ஓ.பி.சி மக்கள் உரிமைக் கட்சியின் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்றார்;.
மேலும் அவர் கூறுகையில் நான் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அரசியலில் மக்களின் சேவகனாக பணியாற்றியுள்ளேன். இரண்டு சட்டமன்றத் தேர்தலில் விராலிமலை, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் வேட்பாளராக போட்டியிட்டுள்ளேன். அதனால் எனக்கு தேர்தலும் தேர்தல் களம் புதிதல்ல மக்களின் மனநிலை அறிந்தவன் என்பது எங்கள் வேட்பாளர்களுக்கு கூடுதல் பலம். விராலிமலை தொகுதியில் தொடர்ந்து விஜயபாஸ்கர் வெற்றி பெற்று வருகிறார் என்பதற்கு அவர் சார்ந்த இனம் மட்டுமல்ல, மாற்று சமூகத்தினரும் வாக்களிக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் மறு தேர்தல்வரை மறக்கப் படுகிறார்கள் விஜயபாஸ்கரால்.
எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறும் பட்சத்தில் மாவட்டத்தில் நீண்ட நாள் கோரிக்கையான காவேரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கக் குரல் கொடுப்போம், பட்டுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வழியாக புதுக்கோட்டைக்கு ரயில் பாதை அமைக்க வலியுறுத்துவோம். மேலும் ஆலங்குடி பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வாசனைத் திரவியத் தொழிற்சாலை மற்றும் குளிர் பதனக் கிடங்கு அமைக்க எங்கள் வேட்பாளர்கள் சட்டசபையில் குரல் கொடுப்பார்கள்.

இரண்டு திராவிடக் கட்சிகளும் எங்கள் ஓ.பி.சி மக்களுக்கு இழைத்த அநீதியான ஒரு சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று அதைத் தடுத்து நிறுத்தியவர் எங்கள் தலைவர். ஆகவே பல்வேறு சாதிகளால் பிரிந்து கிடக்கிற ஓபிசி மக்களுக்கு எந்த அநீதி நடந்தாலும் அதற்கு முழுதாய் குரல் கொடுத்து களத்தில் நிற்பவர்கள் நாங்கள்.

வெற்றியே அனைத்துப் போட்டியாளர்களின் இலக்கு என்றாலும் இந்த தேர்தலை எங்கள் அமைப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாக நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம் எங்கள் போராட்டங்கள் எதிர்கால 256 ஓ.பி.சி சமூக சந்ததிகளுக்கான விதை. அதை காலம் மற்றவர்களுக்கு உணர்த்தும். இப்போது எங்களுக்குத் தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கும் லேப்டாப்பை மக்களிடம் எடுத்துச் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறோம் என்றார்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், ஆகிய மூன்று தொகுதிகளில் மூன்று சமூகங்களைச் சேர்ந்த அதாவது புதுக்கோட்டையில் உடையார் சமூகத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரையும் ஆலங்குடியில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரையும் திருமயத்தில் ஆண்டி பண்டாரத்தார் சாதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன் என்பவரையும் வேட்பாளர்கள் ஆக்கி களம் களம் காண்கின்றனர்.

திருமயம் கனிம வளத்துறை அமைச்சர் ரகுபதி தொகுதியாகும் அதேபோல் ஆலங்குடி படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொகுதி ஆகும். இரண்டு அமைச்சர்களின் தொகுதிகளில் வலம் வரும் வேட்பாளர்கள் சுறுசுறுப்பாக சுழன்று வாக்குகள் சேகரிப்பதைப் பார்க்கும் பொதுவாக்காளர்கள் வியப்படைகின்றனர்.
குறிப்பாக ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சுரேஷ் இளைஞர் என்பதால் அவரைச் சுற்றி இளைஞர் பட்டாளத்துடன் வாக்குகள் கேட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. ஆலங்குடி தொகுதி முத்தரையர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால் அதே சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் உறவினர்களின் வாக்குகளில் கை வைப்பார் என்று தெரிகிறது.