ஒட்டன்சத்திரம் அருகே காட்டு யானைகள் தென்னந் தோப்பையே அழித்துவிட்டு சென்றதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தாசிரிபட்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஈரோட்டை சேர்ந்த தொழில் அதிபர் வஜ்ரவேல் மனைவி தேவசேனா பெயரில் 80 ஏக்கர் அளவில் தென்னந்தோப்பு உள்ளது.
கடந்த ஐந்து நாட்களாக மூன்று யானை 2 குட்டிகளுடன் வந்து தொடர்ந்து தென்னை மரங்களை சேதப்படுத்தி வந்தது.

இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலையில் அதே யானைகள் வந்து 25 தென்னை மரங்களை சேதப்படுத்தி கொண்டிருந்தது இதைத் தோட்டத்தில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்கள் பார்த்து சத்தம் போடவே யானைகள் அங்கிருந்து மலைப் பகுதிக்கு சென்று விட்டது.
இந்தத் தோட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக 115 தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.

சம்பவ இடத்திற்கு ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலர் ராஜா தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று சேதங்களை பார்வையற்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்கள் மற்றும் அடிவார பகுதியில் உள்ள மலை கிராமங்களில் விவசாயத் தோட்டங்களில் யானைகள் அடிக்கடி கூட்டமாக வந்து தென்னை மரம் மற்றும் மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திவிட்டு செல்வது வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த யானைகளால் விவசாயிகள் பெரும் அச்சமடைந்து விவசாயத் தோட்டத்திற்கு செல்வதற்கே பயந்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உடன் தலையிட்டு காட்டு யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





