தென்கயிலாயம் என்று போற்றப்படும் கோவை பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக் கோயிலில், மலையேற்றத்தின் போது பக்தர் ஒருவர் திடீரென சுயநினைவின்றி உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒன்றாவது மலைப் பாதையில் உள்ள குரங்கு பாலம் அருகே நேற்று இரவு சுமார் 11:30 மணி அளவில் பக்தர் ஒருவர் சுயநினைவின்றி விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

விசாரணையில், அவர் கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் என்பது தெரியவந்தது.
மலையேறிக் கொண்டு இருந்த போது செங்குத்தான பாதையில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் நிலைகுலைந்து சரிந்து உள்ளார்.
தகவல் கிடைத்த உடனே வனப் பணியாளர்கள் மற்றும் டோலி தூக்கும் சுமைப் பணியாளர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரைந்து சென்று ஒரு மீட்புப் பணியைத் தொடங்கினர். இருப்பினும், அவரைப் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து, அவரது உடலை டோலியில் கட்டி, கரடுமுரடான மலைப்பாதை வழியாகப் பூண்டி அடிவாரம் நோக்கி கொண்டு வந்து இருக்கின்றனர். இது குறித்து ஆலாந்துறை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோடைக் காலம் தொடங்கி மலைப் பாதைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் வேளையில், போதிய உடல் பரிசோதனைகள் மேற்கொண்டு பின்னரே பக்தர்கள் அனுமதித்து வரும் நிலையில், பக்தர் ஒருவர் சுயநினைவின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



