கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து, தமிழக அரசின் 2026–27 நிதிநிலை அறிக்கையை கடுமையாக விமர்சித்தார்.

சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை என அவர் கூறினார். மாநிலத்தின் கடன் சுமை குறித்து பேசுகையில், தற்போது 9 இலட்சம் 29 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும், அடுத்தாண்டு அது 10 இலட்சம் 62 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார். கடன் சுமையை குறைக்க வேண்டிய நிலையில், ஆண்டுதோறும் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்றும், வருவாய் ஈட்டுவதில் குறைவு காணப்படுவதால் “கடன் வாங்கும் அரசாக” திமுக அரசு மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
உயர் கல்விக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட வெறும் 11 கோடி ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளதாகவும், 47 சதவீதம் இருந்த வளர்ச்சி தற்போது 2 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 100 நாள் வேலைத் திட்டம் 125 நாட்களாக மாற்றப்பட்டதாக கூறிய அவர், “125 வேலை நாட்கள் என்பது ஒப்புக்குச் செய்யப்படும் வேலை என தெரியவந்துள்ளது” என்றார்.
கைவினைத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கலைஞர் கைவினைத் திட்டத்தின் பெயரை மாற்றி ஏமாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். கோவில்கள் புனரமைப்புக்கு 8 ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவிட்டதாக கூறியிருப்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
விவசாய வளர்ச்சி வெறும் 3 சதவீதம் மட்டுமே எனவும், அது மத்திய அரசு வழங்கிய திட்டங்களின் பயனாக ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மாநில அரசு விவசாயிகளுக்காக சுயமாக புதிய திட்டங்களை கொண்டு வரவில்லை என்றும் விமர்சித்தார்.
மெட்ரோ திட்டம் குறித்து பேசுகையில், மத்திய அரசு திட்டத்தை மறுக்கவில்லை என்றும், திட்ட வரைவை மாநில அரசு சமர்ப்பிக்காமல் 5 மாதங்களாக தாமதப்படுத்தி வருவதாகவும் கூறினார். அமைச்சர் தங்கம் தென்னரசு பொய்யான தகவல் வழங்கியதாகவும் குற்றம்சாட்டினார். மத்திய அரசு எந்த மாநிலத்தையும் மாற்றாந்தாய் மனதுடன் அணுகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகை குறித்து பேசுகையில், பொதுநிதியிலிருந்தே வழங்க வேண்டும் என்றும், வேறு நிதிகளில் இருந்து வழங்கக் கூடாது என்றும் கூறினார். திமுக அரசு “அக்கௌண்டிங் பிராடிங்” செய்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், ஏப்ரல் மாதம் முதல் தங்களது கூட்டணியும் ரூ.2,000 வழங்குவதாக அறிவித்துள்ளதாக தெரிவித்தார். தேர்தல் காரணமாக வழங்கப்படும் தொகை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் கூறினார்.
சென்னையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காணவில்லை என்றும் தெரிவித்தார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் உணர வேண்டும் என்றார்.
காங்கிரஸ் கட்சியில் குழப்ப நிலை நிலவுவதாகவும், ஒவ்வொருவரும் தனித்தனியாக கருத்து தெரிவித்து வருவதாகவும் விமர்சித்தார். கரூர் விவகாரம் தனி மனித விமர்சனமாக இருப்பதாகவும், யார் வைத்தாலும் அது ஏற்புடையது அல்ல என்றும் கூறினார். ஜோதிமணியுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்ததாகவும், பேச முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
தேர்தல் காலம் என்பதால் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் பேச வேண்டும் என்றும், அரசியல் முதிர்ச்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு “காத்திருந்து பாருங்கள்” என பதிலளித்தார்.






