சென்னை தாம்பரம் அருகே அகரம் தென் பகுதியில் அரசு நில ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் மீது தாக்குதல் மற்றும் தற்கொலை மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகரம் தென் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் சந்தானம் தொடர்ந்த வழக்கில், சம்பந்தப்பட்ட கட்டிடங்களை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை அமல்படுத்த கடந்த இரண்டு முறை அதிகாரிகள் சென்றபோதும், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் திரும்பியிருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மேல்முறையீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியது. சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அகரம் தென் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அகரம் தென் ஜெகன் என்கிற ஜெகதீஸ்வரன் வீட்டை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இருந்து காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் பொருட்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்ததுடன், மேலிருந்து குப்பைகளுக்கு தீ வைத்து கீழே வீசியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையில், காவல்துறையினர் ஜெகதீஸ்வரனை அப்புறப்படுத்த முயன்றபோது, அவர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவருக்கு ஆதரவாக பரங்கிமலை மேற்கு ஒன்றிய கவுன்சிலர் ரவியும் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகையில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தார்.

அரசு நில ஆக்கிரமிப்பு தொடர்பான இந்த நடவடிக்கையை எதிர்த்து சிலர் அரசியல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
தற்போது, தாம்பரம் தொகுதிக்குட்பட்ட அகரம் தென் ஊராட்சியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










