• Fri. Feb 6th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

கோவையில் கள்ளச்சாவி கில்லாடியின் கைவரிசை..,

BySeenu

Feb 6, 2026

தமிழகத்தின் தொழில் நகரமான கோவையில், கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனத் திருடர்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறப்பது வாகன ஓட்டிகள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வடவள்ளி பகுதியில் அதிகாலையில் அரங்கேறிய ஒரு திருட்டுச் சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கோவை, வடவள்ளி, சிறுவாணி சாலை சித்தி விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை, அதிகாலை 3 மணி அளவில் வந்த மர்ம நபர் ஒருவர், மிகச் சாதாரணமாக மாஸ்டர் கீ எனப்படும் கள்ளச் சாவிகளைப் போட்டுத் திறந்து திருடிச் சென்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அந்த நபர் ஒரு சாவி செட் ஆகவில்லை என்றால் சற்றும் பதறாமல், அடுத்தடுத்து மூன்று, நான்கு சாவிகளை மாற்றி, மாற்றிப் போட்டு லாக்-ஐ உடைத்த விதம், அவர் இந்த பீல்டில் எவ்வளவு பெரிய எக்ஸ்பர்ட் என்பதைப் பறைசாற்றுகிறது.

​கடந்த வாரத்தில் போத்தனூர் மற்றும் வெள்ளலூர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள அறைகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த விலை உயர்ந்த பைக்குகளை மர்ம கும்பல் ஒன்று நைசாக அள்ளிச் சென்றது. அந்தச் சூடு ஆறுவதற்கு உள்ளேயே, இப்போது துரைராஜின் பைக்கை கள்ளச்சாவி போட்டுத் திருடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

துரைராஜ், தனது வண்டி மாயமானதைக் கண்டு சி.சி.டி.வி கேமராவைச் பார்த்த போது தான் இந்தத் திருட்டுச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதுகுறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு ப்பதிவு செய்து அந்த கில்லாடி திருடனைத் தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் சாமானியர்களின் வாகனங்களே தொடர்ந்து டார்கெட் செய்யப்படுவதால், கோவை மாநகரம் திருடர்களின் புகலிடமாக மாறி வருகிறதோ ? என்ற அச்சம் மக்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது.