• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவையில் “குடி”மகனின் விபரீத சாகசம்..,

BySeenu

Feb 2, 2026

கோவையின் அடையாளமாகத் திகழும் அவிநாசி சாலை ஜி.டி. நாயுடு (GD Naidu) மேம்பாலத்தில், மது போதையில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே சாகசம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

​கோவை, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.1 கி.மீ நீளத்திற்குத் தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலமாக இது கட்டப்பட்டு உள்ளது. இந்தப் பாலத்தில் விபத்துக்களைத் தவிர்க்கக் காவல் துறையினர் அதிநவீன வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் இரவு நேரத்திலும் துல்லியமாகப் படம் பிடிக்கும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தித் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இவ்வளவு பாதுகாப்பு வசதிகள் இருந்தும், ஒரு நபர் குடிபோதையில் செய்த காரியம் அனைவரையும் உறைய வைத்து உள்ளது.

நேற்று இரவு மேம்பாலத்தின் மீது சென்ற மதுப்பிரியர் ஒருவர், தனது இருசக்கர அங்கும், இங்கும் சென்று இயக்கி உள்ளார். அப்போது திடீரென இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டும், அங்குமிங்கும் வளைத்துத் துணிகரமாகச் சாகசம் செய்து உள்ளார். பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகள் இதைக் கண்டு நிலைதடுமாறிப் போயினர்.

அவ்வழியாகக் காரில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள், அந்த நபரை எச்சரித்தும் அவர் எதனையும் பொருட்படுத்தவில்லை. அதில் ஒருவர் தனது செல்போனில் இந்த அபாயகரமான காட்சியைப் பதிவு செய்து, “கோவையில் வாகனம் ஓட்டும் வீரன்” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகிப் பேசுபொருளாகி உள்ளது.

இது போன்ற செயல்கள் மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பது குறிபிடத்தக்கது.