சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் 77-ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பெற்றது. இவ்விழாவில் சிவகாசி, ரெட்ஃபோர்ட், ஃபைவ்கில்ஸ் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் நாச்சியார் எரிபொருள் நிறுவனத்தின் இயக்குநரும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான மணிகண்டன் தேசியக் கொடியை ஏற்றினார்.
கல்லூரிச் செயலர் செல்வராசன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

கல்லூரி முதல்வர் .பாலமுருகன் தேசிய உறுதிமொழியை வாசித்தார். துணை முதல்வர். முத்துலட்சுமி தேசிய இளைஞர் தின உறுதிமொழியை வாசித்தார்.
நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் .மாரீஸ்வரன் தேசிய வாக்காளர் தினத்திற்கான உறுதிமொழியை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர் மணிகண்டன் தம் உரையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகிய இந்தியாவில் நாம் வாழ்கின்றோம் என்பதை எண்ணி பெருமை கொள்ள வேண்டும் என்றும் தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மாணவர்கள் தங்களது கல்லூரி வாழ்க்கையில் பயனுள்ள செயல்களைச் செய்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்றும் ஒவ்வொரு மாணவருக்கும் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன தங்களுக்கான சரியான பாதையைத் தேர்ந்தெடுந்து பயணித்தால் வெற்றி நிச்சயம் என்றும் கூறினார்.

இளநிலை கணினி அறிவியல் இரண்டாமாண்டு பயிலும் மாணவி விஜயலட்சுமி மற்றும் இளநிலை இரண்டாமாண்டு உயிரித்தொழில்நுட்பவியல் துறை பயிலும் மாணவி எஸ்.லக்ஷண்யா ஆகியோர் குடியரசு தின உரையாற்றினர். அவர்கள் தம் உரையில், ஜாதி, மத, இன, மொழி ஆகிய வேறுபாடுகளைக் கடந்த வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு இந்தியா என்றும் சுதந்திரத்திற்குப் பின் இந்தியா தன்னை பல்வேறு துறைகளில் முன்னேற்றிக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தனர். மிகக்குறைந்த செலவில் செவ்வாய் கிரகத்தில் தடம்பதித்த பெருமை கொண்ட நாடு இந்தியா என்றும் பிற நாடுகளுக்கு முன்னோடியாகவும், உதவிபுரியும் வகையிலும் தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளது என்றும் கூறினர். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும், குடியரசாக மிளிர்வதற்கும் போராடிய வீரர்களை நினைவில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

விழாவின் முன்னதாக, தேசிய மாணவர்படை மாணவர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. தேர்வில் வெற்றி பெற்ற தேசிய மாணவர் படை மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதுநிலை இரண்டாமாண்டு உயிரித்தொழில்நுட்பவியல் துறை பயிலும் மாணவி செல்வ பாரதி வரவேற்புரையாற்றினார். நிறைவாக, இளங்கலை முதலாமாண்டு சுற்றுலா மற்றும் உணவக மேலாண்மை பயிலும் மாணவன் .ஹரிஹரன் நன்றி நவின்றார்.






