சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் கீழத்தாயில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (வயது30) கால்நடைகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சல் நிலத்திற்கு கொண்டு சென்றார்.

அப்போது மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாடு தாகத்திற்காக அருகில் உள்ள கண்மாய்க்கு செல்வதற்காக தாயில்பட்டியில் இருந்து சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டை கடக்க முயன்றது. அப்போது சாத்தூரில் இருந்த வேகமாக வந்த வேன் மாட்டின் மீது மோதியதில் மாடு தூக்கி வீசப்பட்டது. அப்போது சாத்தூரிலிருந்து தாயில்பட்டிக்கு வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது விழுந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தது. இறந்த பசு மாடு இரண்டு மாத சினையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்து கொண்டிருந்த தாயில்பட்டி ஊராட்சி கட்டணஞ் சேவல் தெருவை சேர்ந்த திலகராஜ் (வயது 60 ) அவரது மனைவி பாப்பா (வயது55) இருவரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தார். மேலும் விபத்து குறித்து மாட்டின் உரிமையாளர் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.






