திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் தெப்பத் திருவிழா நடைபெற்றது பக்தர்கள் தெப்பத்தில் இருந்த வடத்தினை பிடித்து தெப்பக்குளத்தை சுற்றி இருந்தனர்

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 19 ந்தேதி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது.சிகர நிகழ்ச்சியாக இன்று தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டின் வடக்கு பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் சுமார் 6½ அடி உயரத்துக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு தயார்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 24 அடி நீளமும், 24 அடி அகலமும், 28 அடி உயரமும் கொண்ட தெப்பத்தேர் அலங்கரிக்கப்பட்டு தயார்நிலையில் இருந்தது
சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகை அணிகலன்களாலும், புதிய வஸ்திரத்தாலும், வாசனை கமழும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க நகர் வீதிகளில் வலம் வந்து தெப்பக்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர்.
மண்டபத்தில் இருந்து அம்பாளுடன் சுவாமி புறப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளினார்.

இதனை தொடர்ந்து அங்கு குவிந்து இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பரவசத்துடன் தெப்பத்துடன் இணைக்கப்பட்ட வடத்தினை பிடித்து இழுத்ததை தொடர்ந்து, தெப்ப உற்சவம் தொடங்கியது.
இதே போல இரவில் மின்னொளியில் வாணவேடிக்கைகள் முழங்க தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளுவார்.
இரவிலும் தெப்பத்தில் வீற்றிருந்து தெப்பக்குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.






