விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நக்கனேரி கிராமத்தில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் காந்தி ஜெயந்திக்கு 2024 ஆம் ஆண்டு அடிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை வைத்து கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் பொது சுகாதார நிலையத்தை திறந்து வைத்த நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வராதது ஏன் என கேள்வி எழுப்பினர்.
ஆண்கள் பெண்கள் பயன்படுத்தக்கூடிய பொது சுகாதார நிலையம் கட்டியதற்கான நிதி ஒப்பந்ததாரருக்கு சென்றடையவில்லை என ஊராட்சி செயலர் சரவணன் பூபதி கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்ததை பொதுமக்கள் பயன்பாட்டில் கொண்டு வராமல் மூடி இருப்பது நியாயமில்லை என கூறியும் கடந்த கிராம சபை கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தனிநபர் ஒருவருக்காக ஒன்பது லட்சம் செலவில் கழிவுநீர் ஓடை அமைப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்து கிராமப் பகுதி பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் பொழுது இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் உதவியாளராக இருக்கக்கூடிய நபருக்காக 9 லட்ச ரூபாய் செலவில் கழிவுநீர் ஓடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர முன்வராத அரசு தனிநபருக்காக 9 லட்சம் செலவில் பொதுமக்கள் ஒப்புதல் இல்லாமல் கட்டுவதை கண்டித்தும் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை திறக்க வலியுறுத்தியும் எங்கள் பகுதியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் எனவும் இந்த ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் உடந்தையுடன் பல்வேறு முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் நக்கனேரி ஊராட்சியில் அஜித் என்ற தனிநபர் கணினி பொறியாளர் என்று கூறி பணியாற்றி வருவதாகவும் அவருக்கு எந்த ஒரு அரசாணையும் இல்லாமல் பணியாற்றிக் கொண்டு பொதுமக்களை மிரட்டுவதாக குற்றச்சாட்டை முன் வைத்தனர்.






