சென்னை பெரம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா எமோஷனலாக பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது. மேயர் பிரியா தனக்கு ஒரு அப்பா மாதிரி என்று சேகர்பாபுவை குறிப்பிட்டதும், சேகர்பாபுவும் தன் மகள் என்று குறிப்பிட்டு பேசியதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுக்க பொங்கல் திருநாள் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் சென்னை பெரம்பூரில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்ட பொங்கல் விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா, “மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எந்த ஒரு ஏற்பாடுகளை செய்யக் கூறினாலும் துறை சார்ந்து திட்டங்களை முன் வைத்தாலோ இல்லை என்னுடைய தேவைகள் இதுவாக இருக்கிறது என்று தெரிவித்தாலோ தொடர்ந்து எனக்கு தந்தையாக இருந்து அனைத்திலும் உறுதுணையாக இருந்து நீ செய்யுமா.. என்று சொல்லி ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் எனக்கு துணையாக இருந்து செயல்படுத்துவார். என் அப்பா ஸ்தானத்தில் இருக்கும் அமைச்சர் சேகர்பாபு அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்” என்று கண்கலங்கியபடி பேசினார்.
மேயருக்குப் பிறகு பேசிய அமைச்சர் சேகர்பாபு, “என் உயிரினும் மேலான அன்புத் தலைவர் ஸ்டாலின் ஆணைக்கு இணங்க தமிழ்நாடு எங்கும் பொங்கல் திருநாளை கொண்டாடாத பகுதிகளே இல்லை என்று சொல்கிற அளவுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலினிடம் ஆரம்பித்து, துணை முதல்வர், அமைச்சர், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற, மாமன்ற, மண்டல குழு தலைவர், இயக்கத்தில் இருக்கின்ற தலைவர்கள் வரை அனைவரும் எதாவது ஒரு வகையில் பொங்கல் பண்டிகை திருநாளாக கொண்டாடுகின்றார்கள் என்றால் அது திமுகவாக தான் இருக்க முடியும்.

என்னை தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதாக மேயர் பிரியா கண்ணீர்மல்க கூறினார். நிச்சயமாக என் உயிருள்ள வரை மேயர் பிரியா அவர்களை மகளாகத் தான் பாவிப்பேன் என்பதை எடுத்துக் கூறி விடைபெறுகின்றேன்” என்றார் சேகர்பாபு.
இதுகுறித்து திமுக வட்டாரத்தில் பேசியபோது, “சென்னை மேயராக பிரியாவை கொண்டு வந்து அமர வைத்ததே அமைச்சர் சேகர்பாபு தான். சென்னை மேயர் பதவியை பட்டியல் சமூக பெண்ணுக்கு ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்ட பின்பு, திமுகவில் யார் மேயராகலாம் என்ற கடுமையான போட்டி ஏற்பட்டது.
அப்போது மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிச் செயலாளர் புழல் நாராயணன் தனது மனைவி கவிதாவை மாநகராட்சி தேர்தலில் வேட்பாளர் ஆக்கினார். கவிதா நாராயணனே சென்னை மேயர் ஆவார் என அப்போது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. புழல் நாராயணன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருந்தார். இதனால் கவிதா நாராயணனுக்கு மேயர் ஜாக்பாட் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
கவிதா நாராயணன் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தானே அவர் நேராக முடியும், என்று நினைத்த அமைச்சர் சேகர்பாபுத் தரப்பு அதிமுகவினரோடு ஒன்று சேர்ந்து கவிதா நாராயணனை மாநகராட்சி தேர்தலில் தோற்கடித்தது.
தேர்தல் முடிவுக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் இடம் சேகர பாபு தான் தன்னுடைய மனைவியை மாநகராட்சி தேர்தலில் தோற்கடித்து விட்டார் என புகார் கூறினார் புழல் நாராயணன்.
கவிதா நாராயணன் வெற்றி பெறாததால், அமைச்சர் சேகர்பாபு தனது திட்டப்படி தன்னுடைய சொல்லைக் கேட்டு நடக்கும் பிரியாவை மேயர் ஆக்கினார்.
சில வருடங்கள் அமைச்சர் சேகர் பாபுவின் பேச்சை கேட்டு வந்த மேயர் பிரியா, அதன் பிறகு மேயருடன் ஆன இணக்கத்தை குறைத்துக் கொண்டார்.
மேயர் பிரியா தனி அணியாக செயல்படுகிறார் என்ற பேச்சு கூட வடசென்னை வட்டாரத்தில் எழுந்தது.
இந்த நிலையில் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திருவிக நகர் தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புகிறார் மேயர் பிரியா. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அமைச்சர் சேகர்பாபுவின் சம்மதம் முக்கியம் என்பதால், கடந்த ஒரு வருடமாகவே மீண்டும் சேகர்பாபுவிடம் பணிவோடு நடந்து கொள்ள தொடங்கினார்.
இந்த நிலையில் தான் பொங்கல் விழாவில் என்னுடைய தந்தை ஸ்தானத்தில் இருக்கிறார் சேகர்பாபு என கண்கலங்கி பேசியிருக்கிறார் மேயர் பிரியா.

திரு வி க நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தான் களம் இறங்குவதற்கு சேகர்பாபுவின் ஒத்துழைப்பு வேண்டும் என்பதற்காகவே மேயர் பிரியா இவ்வாறு பேசியிருக்கலாம்” என்கிறார்கள் வடசென்னை திமுக வட்டாரங்களில்.
எல்லாமே அரசியல்தானே…





