கிறிஸ்துமஸ் தினத்தன்று நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட இடங்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களை கண்டித்து, மத்திய அரசை எதிர்த்து தாம்பரம் மாநகர தெற்கு மாவட்டம் சார்பில் மேற்குத் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள், திமுக, மதிமுக, காங்கிரஸ், தமுமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, பனையூர் சட்டமன்ற உறுப்பினர் பாபு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மனித நேய மக்கள் கட்சி துணை பொதுச் செயலாளர் யாக்கூப் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கடுமையாக விமர்சித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு,
“ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சங்க பரிவார அமைப்புகள் திட்டமிட்டு சமூகப் பதற்றத்தை உருவாக்கி வருகின்றன. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை பிரதமர் மோடி இதுவரை கண்டிக்கவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும், தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்கள் சுதந்திரமாக மதப் பரப்புரை செய்யும் உரிமையை பாதுகாக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

அதேபோல், “அதிமுக இதுவரை கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல்களை கண்டித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. சீமான் ஆர்எஸ்எஸ்-ன் தமிழ்தேசிய கிளை போல செயல்படுகிறார். த.வெ.க தலைவர் விஜய் கூட இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருகிறார்” எனவும் அவர் விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.




