மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள ரயில்வே பீடர் ரோடு பகுதியில் குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக செல்வதாலும் சாலைகளில் தேங்கும் குடிநீர் கழிவு நீராக மாறி சேரும் சகதியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த பகுதியில் வாடிப்பட்டி அலங்காநல்லூர் பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் நிறுத்தும் தற்காலிக பேருந்து நிறுத்தமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தப் பகுதியில் சோழவந்தான் தபால் அலுவலகம் மத்திய கூட்டுறவு வங்கி தனியார் மருத்துவமனை அரசு பள்ளி உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பல்வேறு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் உள்ள நிலையில் இந்த பகுதியில் பேரூராட்சி மூலம் தினசரி காலையில் திறக்கப்படும் குடிநீரானது குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலைகளில் ஆறாக ஓடுகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
பல நாட்களாக இந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாததால் தினசரி காலை 6 மணிக்கு குடிநீர் குழாயில் தண்ணீர் திறக்கப்பட்டவுடன் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக சாலைகளில் தினசரி தண்ணீர் தேங்கி கழிவு நீராக ஓடுகிறது இது குறித்து பலமுறை பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் மழைக்காலங்களிலும் இந்த பகுதியில் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக காணப்படுகிறது. ஆகையால் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சோழவந்தான் ரயில்வே பீடர் ரோடு பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயை உடைப்பை சரி செய்து சாலைகளில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




