பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்கம் விலை உயர்வை கண்டித்து தாலி கயிற்றில் மஞ்சள் கோர்த்து இந்திய மக்கள் சேவை பிரிவு விவசாய சங்க மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் நூதன முறையில் போராட்டம் நடத்தினார்.

இந்தியாவில் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் இனி வரும் காலங்களில் திருமணத்தின் போது பெண்களுக்கு தங்க தாலிக்கு பதிலாக மஞ்சள் கோர்த்து தான் கழுத்தில் கட்ட வேண்டும் என்றும், பெண் குழந்தைகளுக்கு தோடு, மூக்குத்தி போன்ற சிறிய அளவிலான ஆபரணங்கள் கூட இனிவரும் காலங்களில் போட முடியாத நிலை ஏற்படும் என்பதால், தொடர்ந்து தங்கத்தின் விலை உச்சம் நோக்கி செல்வதை தடுக்க ஒன்றிய அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பெண்களிடம் மஞ்சள் கயிறை கொடுத்து தங்கத்தின் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடத்தினர்.

பரபரப்பாக இயங்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் மனு நாளான இன்று மஞ்சள் தாலி கயிறுடன் நூதன முறையில் நடந்த இப்போராட்டத்தால் சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.




