• Sun. Dec 28th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வைகை எக்ஸ்பிரஸ் பயண நேரம் 25 நிமிடம் அதிகரிப்பு..,

ByKalamegam Viswanathan

Dec 28, 2025

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 25 நிமிடம் அதிகரிக்கப்பட்டு பயன அட்டவணையை தெற்கு ரயில்வே மாற்றியுள்ளதாக ரயில் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வேயில் அதிவேக இன்டர்சிட்டி ரயில்களில் ஒன்றுதான் வைகை எக்ஸ்பிரஸ். மதுரையிலிருந்து ஒவ்வொரு நாளும் காலை 6.40 மணிக்கு வைகை எக்ஸபிரஸ் (12636) புறப்பட்டு, பிற்பகல் 2.10 மணியளவில் சென்னை எழும்பூரைச் சென்றடையும். மறு மார்க்கத்தில் சென்னையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் (12635) சென்னை எழும்பூர் (MS) ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1:45 (13:45) மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு அதே நாளில் இரவு 9:20 (21:20) மணிக்குச் சென்றடைகிறது, இது பொதுவாக 7 மணி நேரம் 35 நிமிடங்கள் ஆகும். 

இந்நிலையில் ஜனவரி 1 முதல் வைகை ரயில் சென்னைக் கோட்டத்திலிருந்து புறப்படும் நேரம் மதியம் 1.15 மணியாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது வந்தடையும் நேரம் இரவு 9.10 மணியாகும். இதனால் பயண நேரம் 25 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் அதிவேக இன்டர்சிட்டி ரயில்களில் ஒன்றான இந்த ரயிலின் புதிய கால அட்டவணையின் மூலம்
இயக்க நேரத்தில் 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கூடுதல் நேரம் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 7 மணி 25 நிமிட இயக்க நேரத்தில் இயங்கிய வைகை‌ எக்ஸ்பிரஸ் ரயில், இப்போது 7 மணி 55 நிமிடங்களில் இயங்குகிறது. கடந்த 2013-ல் வைகை ரயிலின் இயக்க நேரம் 7 மணி 50 நிமிடங்களாக இருந்தது. அப்போது ஒரு இன்ஜின் மாற்றம் இருந்தது, திண்டுக்கல்லில் இருந்து கொடை ரோடு வரை அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்திலும், கொடை ரோட்டில் இருந்து மதுரை வரை மணிக்கு 90 கி.மீ வேகத்திலும் பெரும்பாலும் ஒற்றைப் பாதையில் இயங்கியது. ஆனால் இப்போது ஆரம்பம் முதல் இறுதி வரை இரட்டை ரயில் பாதை உருவாக்கப்பட்டும், வழித்தடம் முழுவதும் மின்மயமாக்கப்பட்ட பிறகும்கூட இந்த நேர அதிகரிப்பை செய்துள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. சோழவந்தானுக்கு இரவு எட்டு மணி அளவில் வந்து சேரும் வகையில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்து அடுத்த கால் மணி நேரத்தில் மதுரை சந்திப்பை வந்த அடைய முடியும் என்ற நிலையில், இரவு 9.10க்கு தான் மதுரை சந்திப்பிற்கு வருவது போன்ற புதிய அட்டவணை எப்படி சரி ஆகும்? இந்தியாவிலேயே மிக முக்கியமான ரயில் போக்குவரத்து வழித்தடத்தில் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இதனை மோசமான கால அட்டவணையாக கருதுகிறோம.

தெற்கு ரயில்வே தற்போதைய புதிய கால அட்டவணையை மறுபரிசீலனை செய்து, மதுரை வருகையை விரைவில் இரவு 8.20 மணியாக மாற்ற வேண்டும்.‌ ரயில் கட்டண உயர்வுக்குப் பிறகு பயண நேரத்தை 20 நிமிடங்கள் அதிகரிப்பது விரும்பத்தக்கது அல்ல. வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை அதிகரித்தால் நேரம் குறைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக உள்ளது என்றனர்

இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி மதுரையிலிருந்து காலை 6.40க்குப் புறப்பட்டுச் சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லை-வந்தே பாரத் ரயிலுக்கு முன்பாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 1.48 மணிக்கு சென்றடைந்துள்ளது. பிற்பகல் 2.10க்குச் சென்று சேர வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு முன்பாகச் சென்றதோடு, குறிப்பிட்ட நேரத்திற்கும் முன்பாகச் சென்றதை பயணிகள் தற்போது நினைவு கூர்ந்தனர். அந்த அளவிற்கு விரைந்து செல்லக்கூடிய, எளிய மக்களின் பயன்பாட்டிற்குரிய வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் நீட்டிக்கப்பட்டிருப்பதை ரயில்வே மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயணம் 20 நிமிடங்கள் கூடுதலாக்கப்பட்டது. கடந்தாண்டு வரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7.10க்கு மதுரையிலிருந்து கிளம்பி சென்னை எழும்பூரை பிற்பகல் 2.30 மணிக்கு சென்றடைந்து சரியாக 7.20 மணி நேரங்கள் பயணம் செய்தது. 

சென்னையை சேர்ந்த ரயில் ஆர்வலர் ஒருவர் கூறுகையில், தற்போது வைகை எக்ஸ்பிரஸ் பயண புள்ளிவிபரங்களை அடிப்படையாக் கொண்டு பார்த்தால், வைகையின் பயண நேரத்தை 7.10 மணி நேரமாகக் குறைக்க முடியும். எடுத்துக்காட்டாக இதற்கு முன்பு 7.08 மணி நேரத்தில் சென்னை சென்றடைந்துள்ளது. ஆகையால் நடைமேடை நிர்வாகம், கால அட்டவணையை சற்று சரி செய்தால், வைகை எக்ஸ்பிரஸை மீண்டும் 7.10 மணி நேரப் பயணத்திற்குள் கொண்டு வர முடியும். தற்போதைய தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ரயில்வே பணியாளர்களின் திறன் மிக்க உழைப்பு ஆகியவற்றால் இந்தப் பயண நேரத்தை சாத்தியமாக்க முடியும்’ என வலியுறுத்தினார்.

ரயில் பயணிகள் மற்றும் ரயில் ஆர்வலர்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுரையிலும் சென்னையிலும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம் வரை உள்ள 25 கிலோமீட்டர் தூரத்தை 25 நிமிடங்களில் கடக்கும் வைகை எக்ஸ்பிரஸ், மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து மதுரை சந்திப்பு வரை உள்ள 21 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க ஒரு மணி நேரம் என்பதுதான் இப்புதிய அட்டவணையை மறுபரிசலனை செய்ய ரயில் பணிகள் கோரிக்கை எழுப்ப காரணம்.