கோவையில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிக வைபவ் என்னும் விற்பனைத் திருவிழா நடைபெற்றது. மாணவிகள் சுயதொழில் வல்லுனர்களாக உருவெடுக்க செய்முறைப் பயிற்சியாகவும் அவர்களுக்கான விற்பனை வாய்ப்பாகவும் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பு மற்றும் மகளிர் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர்.சுந்தர் ராமகிருஷ்ணன் அவர்கள், இணை நிர்வாக அறங்காவலர் திரு.எஸ்.நரேந்திரன் அவர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா ஆகியோர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். கல்லூரியின் முன்னாள், இன்னாள் மாணவிகள் இணைந்து ஆடை, அணிகலன்கள், அழகுசாதனப் பொருட்கள், நகைகள், உணவு, மெஹந்தி, நெயில் ஆர்ட் மற்றும் வேடிக்கை விளையாட்டுகள் எனப் பலவகையான விற்பனை அரங்குகளை அமைத்திருந்தனர். நிகழ்ச்சியில் சுமார் 30க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

கல்லூரிப்பருவத்தில் கல்வியோடு மாணவிகளுக்குத் தேவையான வாழ்வியல் திறன்களை நடைமுறைப் பயிற்சியாக வழங்குவதால் அவர்களது ஆற்றல் வெளிப்படும். மாணவப் பருவத்தில் மாயவலைகளில் தங்களைத் தொலைத்து விடாமல் குறிக்கோள் மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் கொண்டவர்களாக மாணவிகளை உருவாக்குவது நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் முயற்சியாகும். எதிர்கால இந்தியாவாகிய இளைய தலைமுறையினர் ஆற்றல்மிக்க இளமைப்பருவத்தைப் பயனுள்ளதாகவும் முறையானதாகவும் அமைத்துக்கொள்ள வழிகாட்டும் கல்லூரியின் தொடர் முயற்சிகளைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.




