பழனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம் ராஜா கலந்து கொண்டார். பொதுக்குழுவில் பழனி நகர வியாபாரிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்ரம் ராஜா பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

குறிப்பாக பழனி நகரின் வளர்ச்சிக்காக பழனி- கொடைக்கானல் இடையே ரோப் கார் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். பழனி- தாராபுரம் சாலையில் ரயில்வே மேம்பால பணிகளை விரைவாக துவங்க வேண்டும். பழனி கோயிலுக்கு அறங்காவலர் குழு நியமிக்கும் பொழுது பழனியைச் சேர்ந்த வணிகர் ஒருவரை இடம்பெறச் செய்ய வேண்டும். பழனி மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டதாக விக்ரமராஜா தெரிவித்தார். மேலும் நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் வணிகர்களின் கோரிக்கைகள் 70 சதவீதம் அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கோரிக்கையையும் நிறைவேற்ற தமிழக முதல்வருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் , வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு கட்டணமில்லாமல் பதிய நவம்பர் 30 வரை அறிவிக்கப்பட்டிருந்தது.


மேலும் மூன்று மாதம் அவகாசம் கேட்டதற்கு நான்கு மாத காலம் அவகாசம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். தமிழகத்தில் வணிகர்களை பாதிக்கும் வகையில் பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் தொழில் தொடங்குவதை தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கம் வணிகர்களுக்கு மட்டும் பொருள் கொடுக்கவில்லை ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுத்து வருவதாக விக்ரம ராஜா தெரிவித்துள்ளார்.




