கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்தன. இதில், தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு கருதி 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த சட்டங்கள் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டத்தில் கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தமீம் தலைமை தாங்கினார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பக்கிரிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழு துணை செயலாளர் பொன்.செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




