திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடியேற்றம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும்.
கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று(25.11.25) காலை நடைபெற்றது.
உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுப்பிரமணிய சுவாமி- தெய்வானை முன்னிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கொடி கம்பத்திற்கு சந்தனம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு தர்ப்பை புல், மாவிலை, பூ மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கார்த்திகை தீப திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற டிச.2 ந் தேதி இரவு 7.05 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு வைர கிரீடம், நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேக விழா நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிச.3 ந் தேதி காலை 7.05 மணிக்கு கார்த்திகை தீபத் தேரோட்டம் நடைபெறும்.அன்று மாலை 6 மணிக்கு கோயிலில் பாலதீபம் ஏற்றி மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
அதன்பிறகு இரவு 7.30 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு புதிய தாமிர கொப்பரை தயார் செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக மலைமீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக 3½ அடி உயரம், 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 150 மீட்டர் காடாதுணியால் ஆன திரியில், 5 கிலோ கற்பூரத்தில் மகாதீபம் ஏற்றப்படும்.
இந்த ஆண்டுஅறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி சார்பில் கார்த்திகை மகா தீபத்திற்காக புதிய தாமிர கொப்பரை திருவண்ணாமலையில் தயாராகி வருகிறது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், ராமையா, கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.








