கோயம்புத்தூர் விழா துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இந்த கோயம்புத்தூர் விழாவில் நடத்துவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு அதன்படி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று விழாவீதி எனும் Festival Street நிகழ்ச்சி காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வள்ளிக்கும்மி ஆட்டம், உருமி ஆட்டம், பொய்கால் குதிரை, ஒயிலாட்டம், பறையிசை, ஜமாப் இசை, போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கிராஸ்கட் சாலை லட்சுமி காம்ப்ளக்ஸ் பகுதியில் துவங்கி அந்த சாலை முழுவதும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு குழுவினர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இதனை காண வந்த பொதுமக்கள் பலரும் மேலும் ஜமாப் இசை, பறையிசைக்கு உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் பல்வேறு பொதுமக்கள் கலைஞர்களுடன் புகைப்படம் எடுத்து திறமைகளை பாராட்டினர்.
இந்த நிகழ்வின் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.









